தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கூடலூர் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை - பரிசோதனையில் தகவல்

தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட, கூடலூர் பெண்ணுக்கு பரிசோதனையில் கொரோனோ வைரஸ் பாதிப்பு இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2020-03-15 21:45 GMT
ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம், கூடலூரை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஜலதோ‌‌ஷம், சளி, தொண்டை பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கவச உடை அணிந்த ஊழியர்கள் அந்த பெண்ணை மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் சேர்த்தனர்.

மேலும் அவருடைய ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு, தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கு பரிசோதனை முடிவுகள் நேற்று பகல் 12 மணிக்கு வழங்கப்பட்டது. அதன்படி அந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அவருக்கு சளி பிரச்சினை தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று கூடலூரை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது என்று தகவல் பரவியதால் கம்பம், கூடலூரில் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதையடுத்து கூடலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் தெருக்களில் சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் சுகாதார பணியாளர்கள் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் யாருக்கேனும் காய்ச்சல், இருமல், சளி இருந்தால் சுகாதார ஆய்வாளர்களிடம் தொடர்பு கொள்ளலாம் என சுகாதார ஆய்வாளர்களின் செல்போன் எண்களை வழங்கினர்.

கூடலூர் வாரச்சந்தையில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் சந்தைக்கு வரும் பொதுமக்களுக்கு கை கழுவும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து விழிப்புணர்வு நோட்டீசை பொதுமக்களிடம் கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி, குமுளி இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகா‌‌ஷ், விவசாய சங்க தலைவர் செந்தில் ஆகியோர் வழங்கினர். பின்னர் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கையாளவேண்டிய வழிகள் குறித்து ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்யப்பட்டது.

இதேபோல் கம்பம் நகராட்சி சார்பில் அம்மா உணவகம், பஸ் நிறுத்தம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்கள் மற்றும் கேரளாவில் இருந்து வரும் அரசு பஸ்கள் மீது சுகாதார பணியாளர்கள் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணியை நகராட்சி கமி‌‌ஷனர் கமலா,மேலாளர் முனிராஜ், சுகாதார அலுவலர் அரசக்குமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இச்சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்