குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜனதா சார்பில் சத்யாகிரக போராட்டம் 8 இடங்களில் நடந்தது

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜனதா சார்பில் 8 இடங்களில் சத்யாகிரக போராட்டம் நடந்தது.

Update: 2020-03-15 23:30 GMT
நாகர்கோவில்,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் விளக்க பொதுக்கூட்டம், பேரணி மற்றும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. குமரி மாவட்ட பா.ஜனதா சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை பேரணி நடத்தப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

சத்யாகிரக போராட்டம்

இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜனதா கட்சி சார்பில் 8 இடங்களில் சத்யாகிரக போராட்டம் நேற்று நடைபெற்றது. நாகர்கோவில் வட்டவிளை முத்தாரம்மன் கோவில் முன்பு நடந்த போராட்டத்துக்கு ஊர் தலைவர் சிவகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் சிவலிங்க பெருமாள், பொருளாளர் ஜெயராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் தர்மராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இதில் மாவட்ட துணைத்தலைவர் முத்துராமன், மண்டல தலைவர் நாகராஜன், முன்னாள் நகர தலைவர் ராஜன் உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் வட்டவிளை பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது. இதே போல் சரலூர் முத்தாரம்மன் கோவிலில் நடந்த சத்யாகிரக போராட்டத்தில் நாகர்கோவில் நகரசபை முன்னாள் தலைவி மீனாதேவ் கலந்து கொண்டு பேசினார்.

பொதுமக்கள் கையெழுத்து

இதேபோல் பெரியவிளை, சரக்கல்விளை, வெள்ளாடிச்சி விளை, வல்லன்குமார விளை உள்பட மொத்தம் 8 இடங்களில் சத்யாகிரக போராட்டம் நடந்தது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டம் நடைபெற்ற இடங்களில் பொதுமக்களிடம் இருந்து குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக கையெழுத்தும் பெறப்பட்டது.

மேலும் செய்திகள்