கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி: புதுவைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

கொரோனா வைரஸ் எதிரொலியாக புதுவையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்தது. தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

Update: 2020-03-15 23:41 GMT
புதுச்சேரி,

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கர்நாடகாவில் முதியவரும், டெல்லியில் மூதாட்டியும் பலியாகி உள்ளனர்.

இதற்கிடையே கொரோனா வைரஸ் தாக்குதலை பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 80-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

சுற்றுலா பயணிகள் வருகை

புதுச்சேரி சுற்றுலா தலமாக திகழ்வதால் வார இறுதிநாட்கள் மற்றும் பண்டிகை காலங்களை உற்சாகமாக கொண்டாட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருவது வழக்கம். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக புதுவைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. கடற்கரை, பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, நோணாங்குப்பம் படகு குழாம், ஊசுட்டேரி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு பயணிகள் வருகை குறைந்ததால் வெறிச்சோடி கிடந்தது.

அதேபோல் தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் காலியாக கிடந்தது. தியேட்டர், வணிக வளாகங்களிலும் கூட்டம் குறைவாகவே இருந்தது.

முக கவசம்

மேலும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானவர்கள் முன்னெச்சரிக்கையாக முக கவசம் அணிந்தபடி கடற்கரையில் வலம் வந்தனர். தடுப்பு நடவடிக்கையாக போலீஸ் சார்பில் முக கவசம் வழங்கப்பட்டது. கை கழுவுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நேற்று சண்டே மார்க்கெட்டில் மக்கள் நடமாட்டம் வழக்கத்திற்கு மாறாக கொரோனா பீதியால் குறைவாகவே இருந்தது.

மேலும் செய்திகள்