புதுவை அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் 30 தொகுதிகளில் ஆர்ப்பாட்டம்

புதுவை அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் 30 தொகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2020-03-15 23:44 GMT
புதுச்சேரி,

புதுவை அரசு கூட்டுறவு நிறுவனங்களான பாப்ஸ்கோ, பாசிக், கே.வி.கே. அமுதசுரபி, பி.ஆர்.டி.சி., கூட்டுறவு சர்க்கரை ஆலை, சுதேசி-பாரதி மில் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணி செய்யும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுவையில் வாடகை வீடுகளில் வசி்ப்போர் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பிரதம மந்திரியின் சொந்த வீடு கட்டும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்காத புதுவை மாநில அரசை கண்டித்து பா.ஜ.க. சார்பில் புதுவையில் உள்ள 30 தொகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

லாஸ்பேட்டை தொகுதி பா.ஜ.க. சார்பில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மடுவுபேட் சந்திப்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி தலைவர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் ரமேஷ், பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., செல்வகணபதி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் தொகுதி நிர்வாகிகள் விஜயபூபதி, பாபு, அருண்பாண்டி, ரவி, வள்ளி உள்பட பலர் கலந்து கொண்னடர்.

மணவெளி

மணவெளி தொகுதி சார்பில் தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி தலைவர் லட்சுமி காந்தன் தலைமை தாங்கினார். கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

ஆர்ப்பாட்டத்தில் சக்தி பாலன், மாவட்ட பொதுச்செயலாளர் சுகுமாறன், சிலம்பரசன், சுரேஷ் சிவா உள்பட பலர் கலந்து கொண்னடர்.

பாகூர்

பாகூர் தொகுதி பா.ஜ.க. சார்பில் பாகூர் சிவன் கோவில் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் பொதுச்செயலாளர் சிவராமன், மாநில துணைத்தலைவர் தங்க. விக்ரமன், முன்னாள் மாவட்ட தலைவர் வைரமுடி, துணைத்தலைவர் தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருபுவனை தொகுதி பா.ஜ.க. சார்பில் மதகடிப்பட்டு காமராஜர் நினைவு தூண் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திருபுவனை தொகுதி தலைவர் முருகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் நாகராஜ், விவசாயி அணி தலைவர் புகழேந்தி, எஸ்.சி. அணித்தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் புதுவையில் உள்ள 30 தொகுதிகளிலும் பா.ஜ.க. சார்பில் மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஊசுடு

ஊசுடு தொகுதி சார்பில் சேதராப்பட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் சாய் சரவணகுமார் கலந்துகொண்டு பேசியதாவது:-

புதுவை மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக ஊசுடு தொகுதியில் இருந்த பல தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் பல இளைஞர்கள் வேலை வாய்ப்பை இழந்து தவறான பாதைக்கு சென்று சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

தற்போது புதுவையில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை. புதுவை அரசு அறிவித்த எந்த திட்டத்தையும் இதுவரை நிறைவேற்றவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மங்கலம்

மங்கலம் தொகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் எஸ்.எஸ். ஆனந்தன், தொகுதி தலைவர் குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். தொகுதி பொதுச்செயலாளர்கள் பரமசிவம், வேதகிரி, எம்.எஸ்.பெருமாள், பாலா பாஸ்கரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வில்லியனூர் தொகுதி சார்பில் கொம்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் திடலில் தொகுதி தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில பொதுச்செயலாளர் மோகன்குமார், ஆதிமூலம், பழனிசாமி, மோகன் முரளிதரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்