கொரோனா வைரஸ் எதிரொலி: ரெயில் பயணிகளுக்கு நோய் தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை - கலெக்டர் உத்தரவு

ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-03-15 21:45 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

அண்டை மாநிலங்களில் இருந்து கொரோனா வைரஸ் திண்டுக்கல் மாவட்டத்திற்கு பரவாமல் தடுக்க மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு சோதனை சாவடிகள் மற்றும் நோய் கண் காணிப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் தூய்மைப்படுத்தும் பணிகளை வருவாய் துறை, போக்குவரத்து துறை, சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் வருகிற 31-ந்தேதி வரை விடுமுறை விடப்படுவதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உறுதி செய்ய வேண்டும். கொடைக்கானல், பழனி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். இந்த நகரங்களில் சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்களை வருகிற 31-ந்தேதி வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருமல், காய்ச்சல் இருப்போரை கண்டறிந்து மக்கள் கூடும் இடங்களுக்கு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பஸ்கள், வாகனங்கள் தூய்மையாக பராமரிக்கப்படுவதை கண்காணிக்க வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரெயில் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், ரெயில்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்குள் நுழையும்போது கை, கால்களை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை கருவிகள், மருந்துகள், நோய் தடுப்பு கருவிகளை தேவையான அளவில் இருப்பு வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொது) கந்தசாமி, பழனி சப்-கலெக்டர் உமா, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்