போராட்டம், ஊர்வலங்கள் நடத்த அனுமதியில்லை ; கலெக்டர் சண்முகசுந்தரம் தகவல்

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் வேலூர் மாவட்டத்தில் காளைவிடும் திருவிழா நடத்த தடை விதிக்கப்படுகிறது. போராட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தவும் அனுமதியில்லை என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

Update: 2020-03-16 22:30 GMT
வேலூர், 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் இதுவரை யாரும் கொரோனா வைரசால் பாதிக்கப்படவில்லை. இந்த வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கூட்டம் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், நலப்பணிகள் இணை இயக்குனர் யாஸ்மின், துணை இயக்குனர் சுரேஷ், அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் செல்வி ஆகியோர் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க என்னென்ன செய்யவேண்டும் என்பது குறித்து விளக்கினர்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் சண்முகசுந்தரம் பேசியதாவது:-

கொரோனா வைரஸ் போன்று இதற்கு முன்பு எந்த வைரசும் பரவியது இல்லை. இதற்கு முன்பு குடிசைப்பகுதிகளில் தான் நோய்பரவும். ஆனால் கொரோனா வைரஸ் ஜனாதிபதியைகூட விட்டு வைக்கவில்லை. இது நமக்கு சவாலான விஷயம்.

வி.ஐ.டி.யில் வெளிநாட்டு மாணவர்கள் 800 பேர் படிக்கிறார்கள். இதனால் விடுமுறை விடப்பட்டுள்ளது. அடுத்து சி.எம்.சி. மருத்துவமனைக்கு வடமாநிலத்தினர் அதிகமாக வருகிறார்கள். அதேபோன்று தங்கக்கோவிலுக்கு வெளிநாட்டினர் வருகிறார்கள். இந்த 3 இடங்கள்தான் மிக முக்கியமானதாக இருக்கிறது.

கடந்த 2017-ம் ஆண்டு டெங்குவை தடுக்க மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் டெங்கு ஒழிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது. அதில் 2 ஆயிரம் பேர் இடம் பெற்றிருந்தனர். அந்த குழுவை தற்போது பரவி வரும் கொரோனா வைரசை தடுக்கும் பணியில் ஈடுபடுத்தவேண்டும். அவர்கள் மூலம் பஸ்நிலையங்கள், ரெயில் நிலையம், மக்கள் கூடும் இடங்களில் லைசால் கரைசல் தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆரம்பசுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் தினமும் தாசில்தார்கள் ஆய்வுசெய்யவேண்டும். சிகிச்சைக்கு வருபவர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது போன்ற சந்தேகங்கள் ஏற்பட்டால் அவர்களை தனிவார்டில் வைத்து கண்காணிக்க வேண்டும். ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு வந்தால் அது மற்றவர்களுக்கு வந்துவிடாமல் தடுக்கவேண்டும். அதுதான் தற்போது சவாலாக இருக்கிறது.

இதை அரசால் மட்டும் செய்யமுடியாது. அனைவரும் ஒத்துழைக்கவேண்டும். தனியார் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு அறிகுறி காணப்பட்டால், அங்கு அதற்கான மருத்துவ வசதி இல்லையென்றால் பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒரு பஞ்சாயத்துக்கு ஒரு மருந்து தெளிக்கும் ஸ்பிரேயர் வாங்கி கொடுத்து பள்ளி, அங்கன்வாடி மற்றும் சமுதாயக்கூடங்களில் லைசால் கரைசல் தெளிக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும்.

பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி சார்பில் ஒரு வார்டுக்கு ஒரு ஸ்பிரேயர் வாங்கிக்்கொடுத்து கரைசல் தெளிக்க வேண்டும். முகக்கவசங்கள் தட்டுப்பாடு இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும். மருந்து கடைகளில் கூடுதல் விலைக்கு விற்றாலோ, பதுக்கி வைத்தாலோ அவை பறிமுதல் செய்து குடோன்களுக்கு சீல் வைக்கப்படும். ரேஷன் கடைகள் மூலம் முகக்கவசங்கள், கைகழுவ குறைந்த விலையில் சோப்புகள் விற்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வயதானவர்கள், குழந்தைகள் கோவில்களுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். கோவில் திருவிழாக்களை தள்ளி வைக்கவேண்டும். காளை விடும் திருவிழாவுக்கு அனுமதி வாங்கியிருந்தாலும் அது ரத்து செய்யப்படுகிறது. இனிமேல் நடத்தவும் அனுமதி கிடையாது. போராட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தவும் அனுமதி கிடையாது.

கல்லூரிகளில் பட்டமளிப்பு விழா, விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவதை தள்ளிவைக்க வேண்டும். திருமண மண்டபங்களில் திருமணத்தை தவிர வேறு எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது. வெளிமாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரும் பஸ்களின் இருக்கைகளில் லைசால் கரைசல் தெளிக்கவேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், திட்ட இயக்குனர் மாலதி, மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் மார்ஸ், உதவி கலெக்டர் கணேஷ் மற்றும் அதிகாரிகள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள், வணிகர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்