கோவையில் கொரோனா வைரஸ் பீதி எதிரொலி: பஸ், ரெயில், விமானங்களில் பயணிகள் கூட்டம் குறைந்தது

கொரோனா வைரஸ் பீதி காரணமாக கோவையில் பஸ், ரெயில் மற்றும் விமானங்களில் பயணிகள் கூட்டம் குறைந்தது.

Update: 2020-03-16 22:00 GMT
கோவை,

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியா உள்பட உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. கோவையிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் பஸ், ரெயில் மற்றும் விமானங்களில் பயணிகள் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

கோவையில் இருந்து வெளியூர்கள் குறிப்பாக கேரளா செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைந்துள்ளது. இதனால் கேரளா அரசு போக்குவரத்து கழகம் சில பஸ்களை ரத்து செய்துள்ளது.

ஆனால் கோவை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கேரளாவுக்கு வழக்கம்போல பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால் அதில் பயணிகள் கூட்டம் குறைந்துள்ளது.

அரசு பஸ்களில் பயணிகளின் கூட்டம் குறைந்ததால், அரசுக்கு வருமானம் வெகுவாக குறைந்து உள்ளது. கடந்த 8-ந் தேதி ஒரே நாளில் 7 லட்சத்து 81 ஆயிரம் பேர் பஸ்களில் பயணம் செய்தனர். இவர்கள் மூலம் அரசுக்கு ரூ.1 கோடியே 27 லட்சத்து 6 ஆயிரம் வருமானம் கிடைத்தது.

ஆனால் கடந்த 15-ந் தேதி 7 லட்சத்து 47 ஆயிரம் தான் பஸ்களில் பயணம் செய்த னர். அவர்கள் மூலம் அரசுக்கு ரூ.1 கோடியே 15 லட்சத்து 32 ஆயிரம் வருமானம் கிடைத்தது. கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பஸ்களில் 34 ஆயிரம் பயணிகள் குறைவாக பயணம் செய்துள்ளனர். ரூ.11 லட்சத்து 74 ஆயிரம் வருமானம் குறைந்துள்ளது.

கோவையில் இருந்து செல்லும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் 60 சதவீதம் குறைந்துள்ளதாக ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது:-

கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ளது. இதனால் அங்கு செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னை- திருவனந்தபுரம், சென்னை-ஆலப்புழா, சென்னை-மங்களூரு எக்ஸ்பிரஸ், சென்னை-மங்களூரு மெயில் ஆகிய 4 ரெயில்களில் கேரளா செல்வதற்கு எப்போதுமே முன்பதிவு டிக்கெட் கிடைக்காது.

ஆனால் தற்போது அந்த ரெயில்களில் கேரளா மற்றும் சென்னை செல்வதற்கு உடனடியாக டிக்கெட் கிடைக்கிறது. இதன் மூலம் அந்த ரெயில்களில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவை ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் சோத னை நடத்தப்படுகிறது. அவர்களுக்கு தெர்மல்ஸ்கேன் செய்து காய்ச்சலுக் கான அறிகுறிகள் இருக்கிறதா? என்றும் டாக்டர்கள் பரிசோதித்து வருகிறார்கள்.

சார்ஜா, சிங்கப்பூர் மற்றும் கொழும்பு ஆகிய வெளிநாடுகளில் இருந்து கோவை வரும் பயணிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.

இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பீதி காரணமாக வெளிநாட்டு பயணிகள் யாரும் வருவதில்லை. இந்தியாவில் இருந்து சென்றவர்கள் தான் கோவைக்கு திரும்பி வருகிறார்கள். உள்நாட்டு விமானங்களிலும் பயணிகள் எண்ணிக்கை 30 சதவீதம் வரை குறைந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தை விட இந்த மாதம் பயணிகள் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளது.

கோவை வரும் 3 வெளிநாட்டு விமானங்கள் இதுவரை ரத்து செய்யப்பட வில்லை என்றாலும் ஒரு சில நாட்களில் கொழும்பு விமானம் ரத்து செய்யப்படும் என்று தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்