மீன்பிடிக்க வலையை வீசியபோது பரிதாபம்: கடலுக்குள் தவறி விழுந்து மீனவர் பலி

கல்பாக்கம் அருகே கடலுக்குள் படகில் சென்று மீன்பிடிப்பதற்காக வலையை வீசிய மீனவர் கால் இடறி தவறி விழுந்து பரிதாபமாக பலியானார்.

Update: 2020-03-16 22:45 GMT
கல்பாக்கம்,

கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் மெய்யூர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 54). மீனவரான இவர் நேற்று அதிகாலை 4 மணியளவில் துடுப்பு படகில் தனியாக மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். சுமார் 4 கி.மீ. தொலைவு சென்றதும், தனது படகில் நின்றவாறு மீன்பிடிக்க கடலில் வலையை வீசியுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக கால் இடறி கடலுக்குள் தவறி விழுந்தார். இதனால் தண்ணீரில் தத்தளித்த அவர், சிறிது நேரத்தில் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில், படகு மட்டும் தனியே மிதப்பதை சற்றுத்தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் பார்த்தனர்.

பின்னர், அவர்கள் அதிர்ச்சியுடன் வலையை இழுத்து பார்த்த போது, பரசுராமன் வலைக்குள் இறந்து கிடந்தது தெரிந்தது.

இதையடுத்து, அவரது உடலை மீட்டு வந்த சக மீனவர்கள், செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இது குறித்து அறிந்த சதுரங்கப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பரசுராமனின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்