கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ரெயில்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ரெயில்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2020-03-16 22:00 GMT
விழுப்புரம்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாநில அரசு தனிக்கவனம் செலுத்தி அனைத்து மாவட்டங்களிலும் முன்ெனச் சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

அந்த வகையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு சுகாதாரத்துறையுடன் தொடர்புடைய துறைகள் ஒருங்கிணைந்து பணியாற்றுமாறும், பயணிகள் அதிகம் பயணம் செய்யும் அரசு பஸ்களை நாள்தோறும் முறையாக பராமரித்து சுத்தம் செய்யுமாறும் அரசு உத்தரவிட்டதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தினர் அனைத்து பஸ்களையும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளியூர்களுக்கு ரெயிலில் பயணம் செய்வதை பலர் தவிர்த்து வருகின்றனர். இதனால் பெரும்பாலான ரெயில்களில் பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ரெயில்வே நிர்வாகமும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து ரெயில்களின் பெட்டிகளையும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழுப்புரம் ரெயில் நிலையத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு அறிவிப்புகள் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்