அனைத்து அரசு, தனியார் பஸ்களை தினமும் காலை-இரவில் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்த கலெக்டர் உத்தரவு

அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களையும் தினமும் காலை மற்றும் இரவில் கிருமிநாசினி மூலம் தவறாமல் சுத்தப்படுத்த வேண்டும் என கலெக்டர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2020-03-17 00:00 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து வணிக நிறுவனங்கள், உணவகங்கள், திரையரங்கு உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் உள்பட அரசு அலுவலர்கள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கைகளை கழுவி சுத்தப்படுத்திக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள இடத்தினை ஆய்வு செய்தார்.

பின்னர் புதுக்கோட்டை ரெயில் நிலைய வளாகம் மற்றும் வெளி பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை பார்வையிட்டு, நகராட்சி அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர். முன்னதாக கலெக்டர் உமா மகேஸ்வரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அனைவரும் கை கழுவிய பின்னரே மருத்துவமனைக்குள் செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

சுத்தப்படுத்த உத்தரவு

இதேபோல மருத்துவமனைக்கு வெளியே செல்லும்போதும் கை கழுவுவதுடன், மருத்துவமனையின் அனைத்து பகுதிகளையும் கிருமி நாசினி கொண்டு ½ மணி நேரத்திற்கு ஒருமுறை சுத்தப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் அலுவலர்கள் உள்ளே செல்லும் போதும், வெளியே வரும் போதும் கைகழுவ அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதேபோல பள்ளி, கல்லூரிகளில் உள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் தவறாமல் கை கழுவுவதுடன், ஏதேனும் நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையினை அணுகவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களையும் தினமும் காலை மற்றும் இரவில் கிருமி நாசினி மூலம் தவறாமல் சுத்தப்படுத்தவும், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடர்ந்து கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் திரையரங்குகளுக்கு வரும் அனைவரையும் கை கழுவ செய்வதுடன், படம் முடிந்தவுடன் இருக்கைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்தவும், திருமண மண்டபங்கள், வணிகவளாகங்கள் போன்ற இடங்களுக்கு வரும்போதும், திரும்பி செல்லும் போதும் தவறாமல் கை கழுவ அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்