காரியாபட்டி அருகே பயங்கரம்: பழிக்குப்பழியாக நடுரோட்டில் வாலிபர் படுகொலை - 2 பேர் கைது; பெண்கள் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு

காரியாபட்டி அருகே நடுரோட்டில் வாலிபர் ஒருவர், பழிக்குப்பழியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2020-03-16 23:15 GMT
காரியாபட்டி,

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள மாந்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் அக்னிராமன் (வயது 35). விவசாயி.

இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு சாத்தூர் அருகே கந்தவேலு என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர். தற்போது ஜாமீனில் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை பெரிய வையம்பட்டி செல்லும் சாலையில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு ஒரு கும்பல் வந்துள்ளது.

அவர்களை பார்த்ததும் அக்னிராமன் சுதாரித்து தப்ப முயற்சித்தார். ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சுற்றி வளைத்து அரிவாளால் அக்னிராமனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.

அவரது உடல் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மல்லாங்கிணறு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணையை தொடங்கினர். சிலரிடம் நடத்திய விசாரணையில்கந்தவேலு கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்தது.

கந்தவேலுக்கும் அக்னிராமனுக்கும் நிலத்தகராறு இருந்துள்ளது. இதில் அடிக்கடி பிரச்சினை இருந்ததால் கந்தவேலு மாந்தோப்பு கிராமத்தில் இருந்து குடும்பத்தை காலி செய்து விட்டு சாத்தூர் ஓ.மேட்டுப்பட்டியில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தில் கந்தவேலு கொலைசெய்யப்பட்டார். இதில் அக்னிராமனும் அவரது உறவினர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அக்னிராமன் ஜாமீனில் வந்து அச்சங்குளம் பகுதியில் வசித்து வந்துள்ளார். அவரது மனைவி பிரிந்து சென்று விட்ட நிலையில் பெற்றோருடன் தங்கி இருந்துள்ளார். அவரை பழிவாங்க காத்திருந்தவர்கள் நேற்று அவரை தீர்த்துக்கட்டியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனைதொடர்ந்து கந்தவேலுவின் உறவினர்களான ஜெயராமமூர்த்தி, அருண் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தார்கள்.

மேலும் மூர்த்தி, முத்துகண்ணன், தவமணியம்மாள், ராசாத்தி ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்