விழுப்புரம் மாவட்டத்தில், கள் இறக்கி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் கள் இறக்கி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-03-16 22:15 GMT
விழுப்புரம்,


விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு வெகுமதி வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கலந்துகொண்டு விபத்து ஏற்படுத்திய வாகன டிரைவரை துரிதமாக கைது செய்தல், மதுபாட்டில்கள், சாராயம் கடத்தலை தடுத்தல், கிழக்கு கடற்கரை சாலையின் வளைவான பகுதியில் விபத்து தடுப்பு நடவடிக்கை ஆகிய பணிகளில் சிறப்பாக செயல்பட்ட ரேணுகாதேவி உள்பட 3 இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், பாபு, வெங்கடேசன், செந்தில்குமார், விஜயகுமார் உள்பட 30 போலீசாரை பாராட்டி அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.

அதன் பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் கள் இறக்குவதற்கு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. பதநீர் இறக்குகிறோம் என்ற பெயரில் சிலர் கள் இறக்கி விற்று வருகின்றனர். இது சட்டப்படி குற்றமாகும். விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கள் விற்பனை செய்த 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆகவே எக்காரணத்தை கொண்டும் கள் இறக்கக் கூடாது. பதநீர் மட்டுமே இறக்கி கொள்ளலாம். அதை விற்று மீதி இருந்தால் பனை வெல்லமாக்கி விற்கலாம். தற்போது பனைவெல்லத்திற்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. எனவே நுங்கு, பதநீர், பனைவெல்லம் இவற்றை மட்டுமே விற்கலாம். சாராயத்தை போன்றே கள் விற்கவும் அனுமதிக்க முடியாது. சிலர் பணம் சம்பாதிக்க எளிய வழியில் கள் இறக்கி விற்பனை செய்கிறார்கள். இனி அதுபோன்று கள் இறக்கி விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிரு‌‌ஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்