ஓரகடம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பலி கொரியநாட்டை சேர்ந்தவரிடம் விசாரணை

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பலியானார். இந்த விபத்து தொடர்பாக கொரியநாட்டை சேர்ந்தவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2020-03-16 22:30 GMT
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த மாத்தூர் அம்பேத்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் மூங்கிலான், இவருடைய மகன் மோகன், (வயது 22). இவர் நேற்றுமுன்தினம் மாத்தூர் பகுதியில் சர்வீஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதே சாலையில் எதிர் திசையில் இருந்து வந்து கொண்டிருந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் மோகன் கிடந்தார். இதனைப்பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்த மோகனை மீட்டு, சிகிச்சைக்காக வல்லக்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்ததில், மோட்டார் சைக்கிள் மீது மோதிய காரை ஓட்டி வந்தவர் கொரிய நாட்டை சேர்ந்த ஜாக்கூ,(வயது 59) என்பதும், இவர் மாத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது.

இந்நிலையில் குரோம்பேட்டை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மோகன், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். மோகன் உயிரிழந்ததை தொடர்ந்து உறவினர்கள் மற்றும் மாத்தூர் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் விபத்துக்கு காரணமானவர் வேலை செய்யும் நிறுவனத்திற்கு சென்று இழப்பீடு வேண்டி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இழப்பீடு தருவதாக அந்த நிறுவனம் தெரிவித்ததையடுத்து அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர். மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான கொரிய நாட்டை சேர்ந்தவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்