கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் போர் அறைகளை போல் செயல்படும் மந்திரி சுதாகர் பேட்டி

கொரோனவை கட்டுப் படுத்துவதில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் போர் அறைகளை போல் செயல்படும் என்று மந்திரி சுதாகர் கூறினார்.

Update: 2020-03-16 22:45 GMT
பெங்களூரு, 

கொரோனா வைரஸ் பரவல் குறித்து அரசு மருத்துவ கல்லூரி இயக்குனர்களுடன் மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் 17 மாவட்டங்களில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகளில் மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், கொரோனா வைரசை கட்டுப்படுத்த போர் அறைகளை போல் செயல்படும். இந்த ஒவ்வொரு மருத்துவ கல்லூரியிலும் 150 முதல் 200 படுக்கைகள் தனி வார்டுகளாக உருவாக்கப்படும்.

சம்பளம் உயர்த்தப்படும்

மீதமுள்ள 13 மாவட்டங்களில் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகங்களுடன் பேசப்படும். கொரோனாவை கட்டுப்படுத்த அவர்களுடன் அரசு கைகோர்த்து செயல்படும். கர்நாடகத்தில் இதுவரை 8 பேரை கொரோனா தாக்கியுள்ளது. இதில் கலபுரகியை சேர்ந்த 76 வயது முதியவர் மரணம் அடைந்துள்ளார்.

இந்த கொரோனாவை கட்டுப்படுத்துவதில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் ராணுவ வீரர்களை போல் பணியாற்றுகிறார்கள். இதற்காக நான் அவர்களை பாராட்டுகிறேன். மேலும் அவர்களின் சம்பளம் உயர்த்தப்படும். கூடுதல் காப்பீட்டு வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும்.

சரிசெய்ய நடவடிக்கை

கொரோனா வைரஸ் ஆய்வகம் ஹாசன், கலபுரகி, மைசூரு, ராய்ச்சூர் ஆகிய இடங்களிலும் தொடங்க முடிவு செய்துள்ளோம். கொரோனா அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும். ஒருவேளை அரசு ஆஸ்பத்திரிகளில் இடவசதி பற்றாக்குறை ஏற்பட்டால், தனியார் கட்டிடங்களை ஆஸ்பத்திரிகளாக மாற்றி பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளோம்.

கொரோனா வைரஸ் ஆய்வகங்களில் பணியாற்ற போதுமான ஊழியர்களை நியமிக்கும்படி இயக்குனர்கள் கேட்டனர். இந்த குறையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாடுகளில் இருந்து கர்நாடகத்திற்கு வருபவர்கள் விமான நிலையங்களில் தீவிரமான பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.

பயப்பட வேண்டாம்

கலபுரகியில் மரணம் அடைந்தவரின் உடன் இருந்த 4 பேருக்கு கொரோனா அறிகுறி இருந்தது. அவர்களின் ரத்த மாதிரி பரிசோதனை முடிவில் ஒருவருக்கு மட்டுமே அந்த பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவருடன் தொடர்பில் இருந்த 242 பேரை தனிைமபடுத்தி கண்காணித்து வருகிறோம். சளி வந்தாலே கொரோனாவாக இருக்குமோ என்று பயப்பட வேண்டாம். சளிக்கும், கொரோனாவுக்கும் சம்பந்தம் இல்லை.

பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் 104 உதவி மையத்தை தொடர்பு கொண்டு, சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். நான் தினமும் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளின் மருத்துவ அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடுகிறேன். கொரோனா பரவல் குறித்து விவரங்களை சேகரித்து வருகிறேன். கொரோனா பரவல் 3-வது நிலையை தாண்டினால் அரசு அலுவலகங்கள் தற்காலிக ஆஸ்பத்திரிகளாக மாற்றிக்கொள்ளவும் முடிவு செய்துள்ளோம். நமது நாட்டில் இதுவரை கொரோனா 3-வது நிலையை தாண்டவில்லை. இத்தகைய நிலை வெளிநாட்டில் மட்டுமே உள்ளது.

இவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.

மேலும் செய்திகள்