மதுரையில் பட்டப்பகலில், தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டு வாசலில் வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு

மதுரையில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வேலுச்சாமி வீட்டில் நேற்று வெடிகுண்டு வெடித்தது. ரிமோட் மூலம் வெடிக்கச் செய்துவிட்டு தப்பிய 2 பேர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Update: 2020-03-16 23:30 GMT
மதுரை, 

தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வும், மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்புக்குழு உறுப்பினராகவும் இருப்பவர் வக்கீல் வேலுச்சாமி (வயது 72). இவரது வீடு மதுரை அண்ணாநகர் கிழக்கு குறுக்கு தெருவில் உள்ளது.

நேற்று மதியம் அவர் வீட்டில் இருந்தார். அப்போது திடீரென்று பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால் உடனே அவர் வெளியே வந்து பார்த்த போது புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டு அக்கம்பக்கத்தினர் எல்லோரும் ஓடிவந்து பார்த்தனர். அங்கு பேட்டரி, ஒயர்கள் மற்றும் வெடி மருந்துகள் சிதறி கிடந்தன.

உடனே அவர் இது குறித்து அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு தடு்ப்பு பிரிவு போலீசார் விரைந்து வந்தனர்.

வீட்டு வாசலில் கிடந்த ஒயர், 12 ேவால்ட் பேட்டரி, பட்டாசுக்கு பயன்படுத்தும் கரி மருந்து, பிளாஸ்டிக் சிதறல்கள் போன்றவற்றை சேகரித்தனர். அவற்றை வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, “எலெக்ட்ரிக் வெடிகுண்டு” போன்று இருப்பதாகவும், அதில் வெடிமருந்தை பயன்படுத்தி வெடிக்க வைத்து இருப்பதாகவும் தெரியவந்தது. இது தவிர வெடிகுண்டை கண்டு பிடிக்கும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, சம்பவம் நடந்த வீட்டில் மோப்பம் பிடித்துவிட்டு, அங்கிருந்து சில அடி தூரம் ஓடி நின்றுவிட்டது. மேலும் தடயவியல் நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர்.

இதற்கிடையில் மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். போலீசார், அந்த வீட்டின் எதிரே ஒரு மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது உணவு சப்ளை செய்யும் தனியார் நிறுவனத்தின் பனியன் அணிந்து 2 பேர் மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்துள்ளனர். அவர்கள் திடீரென்று ஒரு பார்சலை வீட்டின் உள்ளே தூக்கி வீசினர். பின்னர் அவர்கள் சிறிது தூரம் சென்று மேட்டார் சைக்கிளை நிறுத்தி கையில் ரிமோட் போன்ற பொருளை வைத்து அழுத்தியதும், அடுத்த நொடியில் அங்கு வெடிசத்தம் ஏற்பட்டு புகை மண்டலமாகி உள்ளது. இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமரா மூலம் தெரியவந்தது. அதன் அடிப்படையில் அந்த 2 பேரை பிடிக்க போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.

இது குறித்து தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வேலுச்சாமி நிருபர்களிடம் கூறும் போது, “மதியம் 2 மணிக்கு நிர்வாகிகள் வீட்டிற்கு வந்து கட்சி கூட்டம் தொடர்பான நோட்டீசை கொடுத்து விட்டு சென்றனர். அவர்கள் சென்ற பிறகு எனது அலுவலக அறையில் நான் இருந்தேன். அப்போதுதான் அந்த வெடிகுண்டு வெடித்துள்ளது. ஆனால் வாசல் முன்பு நிறுத்தி இருந்த கார் மற்றும் பூந்தொட்டிகள் எதுவும் சேதம் அடையவில்லை. உடனே நான் போலீசாருக்கு தகவல் கொடுத்தேன். மேலும் சமீபகாலத்தில் எனக்கு மிரட்டல் எதுவும் வரவில்லை. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறேன். எனவே என்னை மிரட்டும் நோக்கில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாேமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வேலுச்சாமியின் மகன் வீடு புகுந்து கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவத்தில் எதிர்தரப்பினர் மீண்டும் மிரட்டுவதற்காக தற்போது வெடிகுண்டை வீசினார்களா? என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது. மேலும் அவர் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகே நடத்தி வந்த மதுபாரிலும் சில ஆண்டுகளுக்கு முன்பு வெடிகுண்டு வீசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்