பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி நகரசபை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி நகரசபை அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2020-03-17 23:00 GMT
தென்காசி, 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி நகரசபை அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அலுவலகத்தை முற்றுகை 

தென்காசி ஆபாத் பள்ளிவாசல் 2–வது தெரு பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 22–ந் தேதி தொடங்கியது. இதற்காக பழைய சாலை தோண்டப்பட்டது. சாலையில் ஜல்லிகள் நிறைந்து காணப்படுகிறது. பணி மிகவும் தாமதமாக நடைபெறுகிறது. மேலும் இந்த பணிக்காக வெட்டிய மரங்களின் பகுதிகள் வீட்டு வாசலில் கிடக்கின்றன. எனவே சாலை பணியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

மேலும் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டியை மக்களின் பயன்பாட்டுக்கு உடனடியாக கொண்டு வர வேண்டும். புதிய குடிநீர் இணைப்புகளுக்காக முன்பதிவு செய்தவர்களுக்கு உடனடியாக இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் நேற்று தென்காசி நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மனு கொடுத்தனர் 

போராட்டத்திற்கு முன்னாள் கவுன்சிலர் சலீம் தலைமை தாங்கினார். கொலம்பஸ் மீரான், செங்கை ஆரிப், திவான் ஒலி, அபாபீல் மைதீன், ஜாபர் ‌ஷரீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோக்கர் ஜான் ஜமால், ஆபாத் ஜூம்மா பள்ளிவாசல் தலைவர் சவுக்கத் அலி, துணை செயலாளர் இஸ்மாயில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு நகரசபை அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்