சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் நெல்லை மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம்

சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரி மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் நெல்லை மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம்.

Update: 2020-03-17 22:15 GMT
நெல்லை, 

சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரி மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் நெல்லை மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

முற்றுகையிட்டு போராட்டம் 

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் அந்த கட்சியினர் நெல்லை மாநகராட்சிக்கு நேற்று திரண்டு வந்தனர். அவர்கள் திடீரென்று மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:–

நெல்லை மாநகர் முழுவதும் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. அதுவும் சாலை போக்குவரத்து அதிகம் உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. ஸ்மார்ட் சிட்டி நகரம் ஆகும் நெல்லையில் சாலைகள் மிகவும் மோசமாக இருப்பது வேதனை அளிக்கிறது.

போர்க்கால அடிப்படையில்... 

நெல்லை சந்திப்பில் இருந்து டவுன் செல்லும் சாலை மிகவும் முக்கியமானது. தற்போது அந்த சாலை மிகவும் மோசமாக இருக்கிறது. வாகன ஓட்டிகளால் செல்ல முடியாத அளவுக்கு சாலை பழுதடைந்துள்ளது. பகல் நேரத்தில் வாகனங்கள் செல்லும் போது சாலையில் தூசி பறந்து வாகன ஓட்டிகள் மட்டுமின்றி அந்தபகுதியில் நடந்து செல்லும் பாதசாரிகளுக்கும், குடியிருப்பு வாசிகளுக்கும் மூச்சு திணறல், கண் எரிச்சல், நுழையீரல் பாதிப்பு போன்றவைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இந்த சாலை மட்டும் அல்லாமல் நெல்லை டவுன், நயினார்குளம், தெற்கு மவுண்ட் ரோடு, பேட்டை ரோடு, போன்ற சாலைகளும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. எனவே சேதமடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்