பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து சென்ற விதவிதமான கப்பல்கள்

பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தை நேற்று விதவிதமான கப்பல்கள் கடந்து சென்றன.

Update: 2020-03-18 00:00 GMT
ராமேசுவரம்,

கேரள மாநிலம் கொச்சி்யில் செயல்படும் மத்திய அரசின் கப்பல் கட்டும் தளத்தில் புதிதாக 4 கப்பல்கள் கட்டப்பட்டன. அவை பயணிகளுக்கான கப்பல்கள் ஆகும்.

இந்திய கப்பல் போக்கு வரத்து துறைக்கு சொந்தமான இந்த 4 கப்பல்களும் அங்கிருந்து கொல்கத்தா ெசன்று சேர்வதற்காக புறப்பட்டு வந்தன.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தை கடப்பதற்காக தென்கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் பாம்பன் தூக்குப்பாலம் நேற்று பகல் 11.30 மணி அளவில் ரெயில்வே நிர்வாகத்தால் திறக்கப்பட்டது. அதை தொடர்ந்து, தென் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் கப்பல்கள் ஒவ்வொன்றாக துறைமுக அதிகாரிகள் அனுமதியுடன் தூக்குப்பாலத்தை கடந்து சென்றன.

இந்த கப்பல் ஒவ்வொன்றும் 32 மீட்டர் நீளமும், 440 டன் எடையும் கொண்டவை என்று கூறப்படுகிறது.

இழுவை கப்பல்

இதே போல் லட்சத்தீவில் இருந்து கடலூர் துறைமுகம் செல்வதற்காக கேட்டியா எனப்படும் ஒரு பாய்மரப்படகும், சென்னையிலிருந்து கூடங்குளம் செல்வதற்காக ஒரு சிறிய இழுவைக் கப்பலும், சென்னை மற்றும் நாகப்பட்டினம் செல்வதற்காக 10 ஆழ்கடல் மீன்பிடி படகுகளும் தூக்குப்பாலத்தை கடந்து சென்றன.

வழக்கமாக கப்பல் கடந்துசெல்வதற்காக பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலம் திறக்கப்படும் போது, பாம்பன் சாலைப்பாலத்தில் நின்று கப்பல்கள் கடலில் செல்லும் காட்சியை ரசிக்க ஏராளமானவர்கள் திரண்டிருப்பார்கள். கொேரனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக ராமேசுவரத்துக்கு சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்ததால் நேற்று விதவிதமான கப்பல்கள் பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்து சென்ற போதும் அதை கண்டு ரசிக்க அதிகமானோர் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்