பழனி முருகன் கோவிலுக்கு வந்த மைசூரு பக்தருக்கு கொரோனா பாதிப்பு? சமூக வலைத்தளங்களில் பரவிய தகவலால் பரபரப்பு

பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனத்துக்கு வந்த மைசூரு பக்தருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-03-18 00:00 GMT
பழனி,

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தொடர் காய்ச்சல், இருமல் பாதிப்புள்ள யாரும் வெளியூர் பயணங்களை தவிர்க்க வேண்டும், கைகளை சுத்தமாக கழுவ வேண்டும், பொதுஇடங்களில் சுகாதாரத்தை பேண வேண்டும் என்று பொதுமக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

ஆன்மிக தலமான பழனி முருகன் கோவிலுக்கு கேரளா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருவதால் அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நுழைவு வாயிலில் ‘தெர்மல் ஸ்கேனர்’ கருவி கொண்டு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டபின் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதில் காய்ச்சல் இருந்தால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

மைசூரு பக்தர்

இந்நிலையில் நேற்று காலை கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து 75 பேர் பழனிக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். படிப்பாதை வழியே வந்த அவர்களை அங்கிருந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் ‘தெர்மல் ஸ்கேனர்’ கருவி கொண்டு பரிசோதனை செய்தனர். அதில் 40 வயது உடைய ஒருவருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இதையடுத்து அவரையும், அவருடன் வந்தவர்களும் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.

பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 13-ந்தேதி மைசூருவில் இருந்து கிளம்பிய அவர்கள் சபரிமலை, திருவனந்தபுரம், கன்னியாகுமரி சென்றுவிட்டு நேற்று பழனிக்கு வந்ததும், அதில் ஒரு பக்தருக்கு கடந்த 2 நாட்களாக காய்ச்சல் இருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காய்ச்சல் இருந்த பக்தரை, பழனி அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் அதிகாரிகள் சேர்த்தனர். அவருடன் வந்தவர்கள் அனைவரும் மைசூருக்கு பஸ்சில் திருப்பி அனுப்பப்பட்டனர்.

சமூக வலைத்தளத்தில் பரபரப்பு

இதுகுறித்து பழனி அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் (பொறுப்பு) உதயகுமார் கூறுகையில், மைசூரு பக்தருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததை அடுத்து அவர் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொண்டை புண், இருமல் பாதிப்பு ஏதும் இல்லை. எனினும் அவரின் ரத்த மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று உறுதிசெய்யப்பட்ட பின்னர் அவர் மைசூருவுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என்றார்.

இதற்கிடையே பழனி முருகன் கோவிலுக்கு வந்த மைசூரு பக்தருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என ‘வாட்ஸ்-அப்’, ‘பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங் களில் வதந்தி பரவியதால் பழனியில் பெரும் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்