கொடைக்கானலில் கொரோனா பீதி: விடுதிகளில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்

கொரோனா பீதியால் கொடைக்கானலில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

Update: 2020-03-17 23:30 GMT
கொடைக்கானல்,

‘மலைகளின் இளவரசி’ யான கொடைக்கானல் பகுதியில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சுற்றுலா இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அத்துடன் தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் வெளிநாடு மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் தங்கி இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆர்.டி.ஓ. (பொறுப்பு) சிவக்குமார், நகராட்சி ஆணையர் நாராயணன், தாசில்தார் வில்சன், சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜா தலைமையிலான குழுவினர் அங்கு சென்று சோதனை செய்தனர்.

வெளியேற்றம்

அப்போது அங்குள்ள ஓட்டல், தங்கும் விடுதிகளில் வெளிநாடு மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த 18-க்கும் மேற்பட்டவர்கள் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு தங்கியிருந்த சுற்றுலா பயணிகளை அதிகாரிகள் வெளியேற்றினர். மேலும் தங்கும் விடுதிகள், ஓட்டல்களையும் மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில் ‘கொடைக்கானல் நகரில் உள்ள ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள், சுற்றுலா இடங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு உணவு, தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் நகருக்கு வருகை தருவதை தவிர்க்க வேண்டும்’ என்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், கொடைக்கானல் நகருக்கு வரும் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டாம் என வத்தலக்குண்டு மற்றும் பழனி சாலையில் உள்ள சோதனைச்சாவடியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா வாகனங்களை அங்கேயே திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும் சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் என்று ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கப்படும்’ என்றனர்.

மேலும் செய்திகள்