கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அரசு அலுவலகங்களில் கை கழுவும் வசதி

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் கை கழுவும் வசதி ஏற்படுத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். முக கவசம் அணிந்து போலீசார், வங்கி ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

Update: 2020-03-17 23:30 GMT
தேனி,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, தேனி மாவட்டத்தில் சுற்றுலா இடங்களுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோவில்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் குறைந்துள்ளது. தேனி நகரில் மக்கள் நெரிசல் அதிகம் காணப்படும் கடை வீதிகளும் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன.

விடுமுறை அளிக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரி வளாகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. வகுப்பறைகள் திறந்து இருந்த போதிலும், அவை காலியாகவே இருந்தன. பஸ் நிலையங்களிலும் கூட்டம் குறைவாகவே இருந்தது. தேனியில் உள்ள வங்கிகளில் ஊழியர்கள் பலரும் முக கவசம் அணிந்து பணியாற்றினர். நிதி நிறுவனங்களிலும் பணியாளர்கள் முக கவசம் அணிந்து பணியாற்றியதை பார்க்க முடிந்தது.

கை கழுவும் வசதி

மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களுக்காக அரசு அலுவலகங்களுக்கு மக்கள் பலர் வந்து செல்கின்றனர். எனவே, மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள் உள்பட அனைத்து அலுவலகங்களிலும் பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் கை கழுவுவதற்கான வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார்.

கை கழுவும் இடம் தனியாக அமைக்கவும், அங்கு சோப்பு ஆயில், சோப்பு போன்றவை போதுமான அளவில் வைக்க வேண்டும் என்றும் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் கைகழுவும் வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் நேற்று நடந்தது.

போலீசாருக்கு உத்தரவு

இதேபோல் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கும் போலீசார் முக கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்பேரில் நேற்று முக கவசம் அணிந்து போலீசார் பணியாற்ற தொடங்கினர். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு கூறியதாவது:-

போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போதும், மருத்துவமனைகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பணிக்கு செல்லும் போதும் போலீசார் கட்டாயம் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும். போலீஸ் நிலையங்களில் போலீசார் மற்றும் பொதுமக்கள் கை கழுவுவதற்கு தேவையான வசதிகள் செய்ய வேண்டும்.

கை கழுவும் இடத்தில் சோப்பு அல்லது கிருமி நாசினி திரவங்களை வைத்திருக்க வேண்டும். போலீஸ் துணை சூப்பிரண்டுகள், தங்கள் உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து இத்தகைய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டு உள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். கேரள மாநில எல்லைகளில் பணியாற்றும் போலீசார் கூடுதல் விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும். வாகன தணிக்கை செய்யும் போதும் நோய் தொற்று ஏற்படாமல் கவனமுடன் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

டிரைவர், கண்டக்டர்கள்

தேனி மாவட்டத்துக்கு கேரள மாநிலத்தில் இருந்து வந்து செல்லும் கேரள மாநில அரசு பஸ்களில் பணியாற்றும் டிரைவர்கள், கண்டக்டர்கள் முக கவசம் அணிந்து பணியாற்றி வருகின்றனர். ஆனால், தேனியில் இருந்து கேரள மாநிலம் மற்றும் பிற பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் பணியாற்றும் டிரைவர்கள், கண்டக்டர்கள் முக கவசம் அணிவது இல்லை.

பஸ்களில் பலதரப்பு மக்களும் பயணம் செய்யும் நிலையில், டிரைவர், கண்டக்டர்கள் நேரடியாக கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே, போக்குவரத்து கழகம் சார்பில் இலவசமாக முக கவசம் வினியோகம் செய்ய வேண்டும் என்பது போக்குவரத்து கழக தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது. இதேபோல், தனியார் பஸ் நிறுவனங்களும் தங்களின் பணியாளர்களுக்கு முக கவசங்கள் வழங்க முன்வர வேண்டும்.

உழவர் சந்தை

தேனி உழவர் சந்தையில் கடைகள் அமைத்துள்ள விவசாயிகளுக்கு, உழவர் சந்தை அதிகாரிகள் நேற்று முக கவசம் வழங்கினர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சந்தையில் வழக்கம் போல் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. ஆனால், விவசாயிகள் முக கவசம் அணியாமல் பணியாற்றினர்.

இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, ‘முக கவசம் அணிந்து பணியாற்றினால் காய்கறி வாங்க வரும் மக்கள் தயங்குகின்றனர். இதனால், முக கவசம் அணிவதை தவிர்த்து விட்டோம்’ என்றனர். இதுகுறித்து உழவர் சந்தை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்களுக்கும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. பொதுமக்களுக்கும் முக கவசம் வழங்க உள்ளோம். அதன் மூலம் மக்களிடம் அச்சம் விலகும்’ என்றனர்.

மேலும் செய்திகள்