விழுப்புரம் அருகே பஸ் டிரைவர் கழுத்தை இறுக்கி கொலை கள்ளக்காதலனுடன் மனைவி கைது

விழுப்புரம் அருகே தனியார் பஸ் டிரைவரை கழுத்தை இறுக்கி கொலை செய்த அவரது மனைவி தனது கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-03-17 23:30 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள வி.அரியலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராஜகுமாரன் (வயது 35), தனியார் பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார். வேலை இல்லாத சமயத்தில் விழுப்புரம் ஆவின் நிறுவனத்தில் கார் ஓட்டி வந்தார்.

இவர் திருமணத்திற்கு பிறகு கடந்த 5 ஆண்டுகளாக விழுப்புரம் தந்தை பெரியார் நகரில் ஒரு வாடகை வீட்டில் மனைவி லதா (27), மகள் சங்கவியுடன் (6) வசித்து வந்தார்.

கள்ளத்தொடர்பு

ராஜகுமாரன், ஆவின் நிறுவனத்தில் கார் ஓட்டி வந்தபோது அவருக்கும் அங்கு ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் விழுப்புரம் வழுதரெட்டியை சேர்ந்த முனியன் மகன் ரஞ்சித் (25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இதன் அடிப்படையில் ராஜகுமாரன் வீட்டிற்கு ரஞ்சித் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் ரஞ்சித்துக்கும், லதாவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விவரம் வீட்டின் உரிமையாளருக்கு தெரியவரவே அவர்கள், ராஜகுமாரன் குடும்பத்தினரை வீட்டை விட்டு காலி செய்து விட்டனர். அதன் பிறகு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ராஜகுமாரன் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான வி.அரியலூரில் குடியேறினார்.

சாவு

இந்நிலையில் நேற்று காலை ராஜகுமாரன் தனது வீட்டில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக லதா, அக்கம், பக்கத்தில் உள்ள பொதுமக்களிடம் கூறினார். இதுபற்றி விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகேசன், சப்-இன்ஸ்பெக்டர் பிரகா‌‌ஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜகுமாரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம் பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர்.

மனைவி, கள்ளக்காதலன் கைது

மேலும் ராஜகுமாரனின் கழுத்துப்பகுதி இறுக்கப்பட்ட நிலையில் இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் அவரது மனைவி லதா மற்றும் அக்கம், பக்கத்தில் உள்ள பொதுமக்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது லதா முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவரிடம் போலீசார், ‘கிடுக்கிப்பிடி’ விசாரணை நடத்தினர். விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ராஜகுமாரனை தானும், ரஞ்சித்தும் சேர்ந்து கழுத்தை இறுக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதனை தொடர்ந்து லதாவையும், அவர் கொடுத்த தகவலின்பேரில் ரஞ்சித்தையும் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் இருவரையும் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்