பறவை காய்ச்சல் உறுதியானது: மைசூரு, தாவணகெரேயில் 10 ஆயிரம் கோழிகளை அழிக்க முடிவு கால்நடைத்துறை மந்திரி பிரபுசவான் தகவல்

பறவை காய்ச்சல் உறுதியானதை அடுத்து மைசூரு, தாவணகெரேயில் 10 ஆயிரம் கோழிகளை அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கால்நடைத்துறை மந்திரி பிரபுசவான் கூறியுள்ளார்.

Update: 2020-03-17 23:02 GMT
பெங்களூரு, 

கால்நடைத்துறை மந்திரி பிரபுசவான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோழிகளை அழிக்க நடவடிக்கை

பறவை காய்ச்சல் பரவி இருப்பது உறுதியாகியுள்ளதால் கர்நாடகத்தில் மைசூரு மாநகராட்சி எல்லைக்குள் உள்ள கும்பாரகொப்பலு கிராமத்தில் செயல்பட்டு வரும் கோழிப்பண்ணையில் 9 ஆயிரம் கறிக்கோழிகளை விஞ்ஞான பூர்வமாக அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா தாலுகாவில் உள்ள பன்னிகோட கிராமத்தில் 1,167 நாட்டு கோழிகள் வளர்க்கப்பட்டுள்ளன. அவற்றையும் கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகமொத்தம் 10 ஆயிரத்து 167 கோழிகள் அழிக்கப்படுகின்றன.

மைசூருவில் பறவை காய்ச்சல் பரவிய இடத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதியை பறவை காய்ச்சல் பரவிய மண்டலமாக அறிவித்துள்ளோம். 2 மீட்டர் நீளம், 2 மீட்டர் ஆழத்தில் குழி தோண்டி அதில் அந்த கோழிகளை உயிருடன் போட்டு மூடி கொன்று அழிக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. மண்ணில் சுண்ணாம்பு உள்ளிட்ட சில பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

கண்காணிக்கப்படும்

பறவை காய்ச்சல் பரவிய பகுதிகளில் 3 மாதங்கள் கோழிகளை வளர்க்க அனுமதி இல்லை. அந்த பகுதி தீவிரமாக கண்காணிக்கப்படும். அழிக்கப்படும் கோழிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். பறவை காய்ச்சல் பரவிய பகுதிகளில் உள்ள கோழி முட்டைகளையும் அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பீதியால் கோழி இறைச்சி வணிகம் பெரிய அளவில் சரிந்துவிட்டது. பறவை காய்ச்சல் பரவியதை அடுத்து, பல பகுதிகளில் கோழிப்பண்ணையாளர்கள் தாமாக முன்வந்து, கோழிகளை அழிக்க தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு அரசின் நிவாரணம் கிடைக்காது.

இவ்வாறு பிரபுசவான் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்