கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை: அரசின் உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை; கலெக்டர் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தமிழக அரசின் உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அன்பழகன் கூறினார்.

Update: 2020-03-18 22:30 GMT
கரூர், 

கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கரூர் ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் கலெக்டர் அன்பழகன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

ரெயில் நிலையம் மற்றும் பஸ்நிலையத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பரிசோதனை செய்யும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவ முகாம்களை பார்வையிட்டார். மேலும், ரெயில் நிலையத்தில் உள்ள பயணிகள் காத்திருப்பு அறை, பயணச்சீட்டு வழங்கும் இடம், குடிநீர் குழாய்கள் அமைந்துள்ள இடங்களில் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு துாய்மையாக பராமரிக்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கலெக்டர் நிருபர் களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:- தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுகின்றது.

 கிராமங்கள்தோறும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன எல்.இ.டி வாகனம் மூலம் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றது. 

ரெயில் நிலையம், பஸ்நிலையம், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் என பொதுமக்கள் அதிகம் வரும் இடங்களில் அவர் களின் கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அல்லது கைகளை துாய்மையாக கழுவிய பின்னரே அனுமதித்து வருகின்றார்கள். சுகாதாரத்துறை அலுவலர்கள் தொடர்ந்து இப்பணிகளை கண்காணித்து வரு கின்றார்கள்.

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளிகளையும் வருகிற 31-ந்தேதி வரை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவை மீறும் வகையில் இயங்கும் பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சமூக வலைத்தளங்களில் கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 3 பேருக்கு பாதித்துள்ளது என்பது போன்ற தவறான தகவல்களை சிலர் பரப்பி வருவதாக புகார்கள் வரப்பெற்றுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் இந்த வேளையில், அரசின் உத்தரவை மீறும் வகையிலோ பொது மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலோ கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்களை பரப்பும் நபர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பணியில் நாம் ஒவ்வொருவரும் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் குறித்த புரிதலையும், விழிப்புணர்வையும் தெரிந்தவர்கள் அனைவருக்கும் எடுத்துச்சொல்ல வேண்டும். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அரசின் செயல்பாடுகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

கொரோனா குறித்த சந்தேகங்களுக்கு 104 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும், 04324-255340 என்ற ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு பிரிவிற்கும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை 04324-256306 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது, கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, கரூர் ரெயில்வே மேலாளர் ராஜராஜன் ,நகராட்சி நகர்நல அலுவலர் பிரியா, கரூர் வட்டாட்சியர் அமுதா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதேபோல், கரூர் நகராட்சிக்குட்பட்ட சர்ச்கார்னர் புகளூர் சாலை அருகில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்திற்கு கலெக்டர் நேரில் வந்து, ஆய்வு செய்தார். அப்போது அரசின் உத்தரவின்படி அங்கன்வாடி மையம் மூடப்பட்டிருந்தது. அருகில் உள்ள குடியிருப்புபகுதிகளில் அங்கன்வாடி மையப்பணியாளர்கள் குழந்தைகளுக்கான உணவுப்பொருட்களை வழங்கிக்கொண்டிருந்தனர். 

தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குச்சென்று குழந்தைகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அங்கிருந்த தாய்மார்களிடம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான அறிவுரைகளை வழங்கினார். 

மேலும் செய்திகள்