தூத்துக்குடியில் மீன்கள் விலை உயர்வு

தூத்துக்குடியில் வரத்து குறைந்து இருப்பதால், மீன்கள் விலை உயர்ந்துள்ளது.

Update: 2020-03-18 22:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் வரத்து குறைந்து இருப்பதால், மீன்கள் விலை உயர்ந்துள்ளது.

கொரோனா 

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பொதுமக்கள் கோழிக்கறி மற்றும் ஆட்டுக்கறி சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் மக்கள் அதிக அளவில் மீன்களை சாப்பிடத் தொடங்கி உள்ளனர். அதே நேரத்தில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் மீன்கள் வரத்து குறைவாக உள்ளது. இதன் காரணமாக மீன்களின் விலை உயர்ந்து வருகிறது.

விலை விவரம் 

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தில் விசைப்படகுகள் மூலம் அதிக அளவில் மீன்கள் பிடித்து வரப்படுகின்றன. இங்கு வாளைமுரள், பறவை, ஊளி மீன்கள் அதிகமாக பிடிபடுகிறது. மீன்களின் வரத்து குறைவாக இருப்பதால், விலை உயர்த்தி விற்கப்படுகிறது. ஒரு கிலோவுக்கு முன்பு இருந்ததை விட தற்போது மீன்களின் விலை ரூ.50 முதல் ரூ.60 வரை விலை உயர்ந்துள்ளது. இதை தொடர்ந்து நேற்று ஒரு கிலோ வாளை முரள் மீன் ரூ.220–க்கும், கலிங்கன் ரூ.320–க்கும், ஊளி ரூ.360–க்கும், பறவை மீன் ரூ.140–க்கும், விளமீன் ரூ.300–க்கும், கட்டமுரள் ரூ.260–க்கும், செந்நகரை ரூ.250–க்கும் விற்பனை செய்யப்பட்டன.

இது குறித்து மீன்வியாபாரி பக்ருதீன் கூறும் போது, கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியால் மக்கள் அதிக அளவில் மீன் சாப்பிட தொடங்கி உள்ளனர். மீன்களின் வரத்தும் குறைவாக இருப்பதால் மீன்களின் விலை உயர்ந்து உள்ளது என்று கூறினார்.

மேலும் செய்திகள்