மானூர் அருகே பரிதாபம் குட்டையில் மூழ்கி 5–ம் வகுப்பு மாணவன் பலி

மானூர் அருகே குட்டையில் மூழ்கி 5–ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தான்.

Update: 2020-03-18 21:30 GMT
மானூர், 

மானூர் அருகே குட்டையில் மூழ்கி 5–ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தான்.

லாரி டிரைவர் 

நெல்லை மாவட்டம் மானூர் அருகே குப்பனாபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். லாரி டிரைவர். இவருடைய மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு முருகையா (வயது 10) என்ற மகனும், நந்தினி (7) என்ற மகளும் இருந்தனர். இவர்கள் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் முறையே 5 மற்றும் 2–ம் வகுப்பு படித்தனர்.

தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. நேற்று மகாலட்சுமி அப்பகுதியில் உள்ள ராமகிருஷ்ணன் என்பவரது தோட்டத்தில் கூலி வேலைக்கு சென்றார். அப்போது அவர் தன்னுடைய மகன் முருகையாவையும் தோட்டத்துக்கு அழைத்து சென்றார்.

குட்டையில் மூழ்கி... 

அந்த தோட்டத்தில் மழைநீரை தேக்கும் வகையில் பண்ணை குட்டை அமைக்கப்பட்டு உள்ளது. அதில் தண்ணீர் தேங்கி இருந்தது. இந்த நிலையில் தோட்டத்தில் மகாலட்சுமி வேலை செய்து கொண்டிருந்தபோது, முருகையா பண்ணை குட்டை அருகில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அவன் எதிர்பாராதவிதமாக பண்ணை குட்டையில் தவறி விழுந்தான். இதில் தண்ணீரில் மூழ்கிய முருகையா பரிதாபமாக உயிரிழந்தான்.

நீண்ட நேரமாகியும் முருகையாவை காணாததால், அவனை தாயார் தேடினார். அப்போது பண்ணை குட்டையில் முருகையா மூழ்கி இறந்தது தெரிய வந்தது. அவனது உடலை தொழிலாளர்கள் மீட்டனர். இறந்த முருகையாவின் உடலைப் பார்த்து முருகலட்சுமி கதறி அழுதார்.

போலீசார் விசாரணை 

இதுகுறித்து தகவல் அறிந்ததம், மானூர் போலீசார் விரைந்து சென்று, இறந்த முருகையாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மானூர் அருகே குட்டையில் மூழ்கி 5–ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்