நிரந்தர பணியாளராக மாற்றுவதாக கூறி பெண் பாலியல் பலாத்காரம்; முன்னாள் நகராட்சி கமிஷனர் மீது புகார்

நிரந்தர பணியாளராக மாற்றுவதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக குடியாத்தம் நகராட்சி முன்னாள் கமிஷனர் மீது பெண் புகார் அளித்துள்ளார்.

Update: 2020-03-18 22:00 GMT
வேலூர், 

குடியாத்தம் செதுக்கரை பகுதியை சேர்ந்த 23 வயது பெண் நேற்று வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் குடியாத்தம் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பணிபுரிந்தேன். அப்போது நகராட்சி கமிஷனராக இருந்தவர் என்னை அவரது பங்களாவிற்கு வரும்படி கூறினார். அங்கு சென்ற என்னிடம் அவர் நகராட்சியில் நிரந்தர பணியாளராக மாற்றுகிறேன் என்று கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். அதன்பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்தார்.

திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நான் வற்புறுத்தியதன் காரணமாக கடந்தாண்டு மேமாதம் 3-ந் தேதி என்னை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் வேறு இடத்துக்கு பணிமாறுதலாகி சென்று விட்டார். அதன்பின்னர் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது என்னை தொந்தரவு செய்யாதே. இல்லையென்றால் நீ என்னுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை அனைவருக்கும் அனுப்பி விடுவேன் என்று மிரட்டுகிறார்.

கடந்த 16-ந் தேதி அவரை ராணிப்பேட்டையில் சந்தித்து இதுகுறித்து கேட்டேன். அப்போது அவர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர்.

மேலும் செய்திகள்