கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக பயணிகள் எண்ணிக்கை குறைந்தது; 50 அரசு பஸ்களின் இயக்கம் ரத்து

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததையொட்டி, திருச்சி மண்டலத்தில் 50 அரசு பஸ்களின் இயக்கத்தை ரத்து செய்திருப்பதாக திருச்சி மண்டல அதிகாரி தெரிவித்தார்.

Update: 2020-03-19 00:00 GMT
திருச்சி,

சீனாவில் உருவெடுத்த கொரோனா வைரஸ் உலகெங்கிலும் ஆட்கொண்டு வேகமாக பரவி வருகிறது. இந்தியா முழுமைக்கும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டதன் காரணமாகவும், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டதாலும் சாலைகளில் ஆட்கள் நடமாட்டம் குறைந்து விட்டது.

மேலும் தேவையில்லாமல் வெளியூர் பயணிப்பதை பயணிகள் தவிர்க்க வேண்டும் என்று அறிவித்ததன் காரணமாக பலர் பஸ் பயணத்தையே தவிர்த்து விட்டனர். இதனால், பஸ்சில் பயணிப்போர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. திருச்சி மத்திய பஸ் நிலையம் மற்றும் சத்திரம் பஸ் நிலையம் பயணிகள் இன்றி வெறிச் சோடின.

கிருமி நாசினி தெளிப்பு

இந்தநிலையில் நேற்று மாலை திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக (கும்பகோணம் லிட்) திருச்சி மண்டல பொதுமேலாளர் ராஜ்மோகன், துணை மேலாளர்கள் சிங்காரவேலு (வணிகம்), சங்கர்(மத்திய பஸ் நிலையம்), கோட்ட மேலாளர்(புறநகர்) பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது.

பஸ்சின் உட்புற இருக்கை, சாய்மானம், கண்ணாடி, கைப்பிடி குழாய்கள் ஆகிய இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதுபோல சத்திரம் பஸ் நிலையத்திலும் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. அதற்காக 12 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு 3 ‌ஷிப்டுகளாக பணியாற்றி வருகிறார்கள். மேலும் இதர கிளைகளிலும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு மொத்தம் 150 பேர் கிருமி நாசினி தெளிக்கவும், இதர பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். பஸ்சை ஓட்டிச்செல்லும் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. அவர்கள் முகக்கவசங்கள் அணிந்தபடியே பணிகளை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல பொதுமேலாளர் ராஜ்மோகன் கூறியதாவது:-

50 வழித்தட பஸ்கள் ரத்து

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் ஒரு நாளுக்கு சராசரியாக 1 லட்சத்து 35 ஆயிரம் பயணிகள் வந்து செல்கிறார்கள். பயணிகள் எண்ணிக்கையை பொறுத்து தேவைக்கேற்ப சிறப்பு பஸ்கள் இயக்கி வந்தோம். தற்போது, பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை குறைந்து விட்டதால் வசூலும் வெகுவாக குறைந்து விட்டது.

எனவே, திருச்சி மண்டலத்தில் உள்ள திருச்சி, மணப்பாறை, உப்பிலியபுரம், லால்குடி, துவாக்குடி, அரியலூர், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட 13 கிளை பணிமனைகளில் இருந்து பல்வேறு வழித்தடங்களுக்கு இயக்கப்பட்டு வந்த 50 அரசு பஸ்களின் இயக்க சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பஸ் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி? என்று துண்டு பிரசுரங்களும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்