பரமக்குடியில் உணவு பாதுகாப்பு துறையினர் நடத்திய கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

பரமக்குடியில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கையில் உணவு பாதுகாப்பு துறையினர் ஈடுபட்டனர்.

Update: 2020-03-18 21:15 GMT
பரமக்குடி,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் ஆலோசனையின் பேரில் உணவு பாதுகாப்புத் துறையினர் மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி பரமக்குடி பஸ் நிலையத்தில் உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் சிவராம பாண்டியன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பரமக்குடி முத்துச்சாமி, போகலூர் வீரமுத்து, மண்டபம் லிங்கவேல், கீழக்கரை ஜெயராஜ் ஆகியோர் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டிரைவர்கள், கண்டக்டர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், பயணிகள், பொதுமக்கள் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி தங்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

மேலும் சோப்பு மற்றும் கிருமி நாசினிகள் மூலம் கைகளை கழுவி பாதுகாத்துக்கொள்ளும் முறையினை செயல் விளக்கம் அளித்தனர். இதுதவிர அப்பகுதியில் உள்ள கடைகளை ஆய்வு செய்து தடை செய்யப்பட்ட புகையிலை, பிளாஸ்டிக் பைகள், காலாவதியான பொருட்களை கைப்பற்றி அழித்தனர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய கடை உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சிவராம பாண்டியன் கூறும்போது, உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வகையில் கலெக்டர் வீரராகவ ராவ் ஆலோசனையின் பேரில் மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்குவது பரமக்குடியில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. கை கழுவுதல் மூலம் பாதுகாக்கும் முறை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் செய்திகள்