கொடைக்கானலில் தங்கும் விடுதிகள் மூடல்: சாலையோரத்தில் தஞ்சம் அடைந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

கொடைக்கானலில் தங்கும் விடுதிகள் மூடப்பட்டதால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சாலையோரத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

Update: 2020-03-19 00:00 GMT
கொடைக்கானல்,

‘மலைகளின் இளவரசி‘யான கொடைக்கானலில் நிலவும் குளு, குளு சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருவர். அதன்படி கடந்த சில வாரங்களாக, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, கொடைக்கானல் களை இழந்து விட்டது. அங்குள்ள அனைத்து சுற்றுலா இடங்களும் மூடப்பட்டன. கொடைக்கானலுக்கு வர சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

கொடைக்கானலை பொறுத்தவரையில் இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் கொடைக்கானலுக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இவர்கள் அங்குள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் பல நாட்கள் தங்கியிருந்து இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை பார்த்து ரசிப்பது உண்டு. சுட்டெரிக்கும் கோடைகாலத்தில் நிலவும் குளு, குளு சீசனை அனுபவித்து மகிழ்வது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டும் வழக்கம்போல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்தனர். இவர்கள் அங்குள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் தங்கியிருந்தனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக கொடைக்கானலில் தங்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சாலையோரத்தில் தஞ்சம்

இதன் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் தங்குவதற்கு நேற்று முன்தினம் முதல் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கொடைக்கானலுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் நிலை பரிதாபமாகி விட்டது. இவர்கள் ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

எனவே கொடைக்கானலில் உள்ள சாலையோரமே அவர்களுக்கு புகலிடம் ஆகி விட்டது. நேற்று காலை திறந்தவெளியில் ஆங்காங்கே வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அமர்ந்திருந்தனர். குறிப்பாக கொடைக்கானல் ஏரிச்சாலை, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட இடங்களில் சாலையோரத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

கேள்விக்குறியான பாதுகாப்பு

பகலில் சாலையோரத்தில் அமர்ந்திருந்து பொழுதை போக்குகின்றனர். இரவில் சாலையோரத்திலேயே படுத்து தூங்குகின்றனர். இதனால் அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே கொடைக்கானலில் உள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை பாதுகாப்பான முறையில் அவர்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதற்கிடையே கொடைக்கானலில் நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது. அனைத்து சுற்றுலா இடங்களும் மூடப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பிரையண்ட் பூங்கா, தூண்பாறை, ஏரிச்சாலை வாகன நிறுத்தம், பைன்மரக்காடு, மோயர் பாயிண்ட், நட்சத்திர ஏரி உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

இதேபோல் கொடைக்கானல் பகுதியில் உள்ள ஏராளமான கடைகள் மூடப்பட்டன. ஒரு சில ஓட்டல்கள் மட்டுமே திறந்து இருந்தன. ஆனால் சுற்றுலா பயணிகள் வரத்து இல்லாததால் அவை வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் கொடைக்கானல் பகுதியில் பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்து விட்டது.

மேலும் செய்திகள்