கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பஸ், ரெயில் பயணங்களை தவிர்க்கும் பொதுமக்கள்

கொரோனா வைரஸ் அச்சம் எதிரொலியாக ரெயில், பஸ் பயணங்களை பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர்.

Update: 2020-03-18 23:30 GMT
திண்டுக்கல்,

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியா உள்பட உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தலைமை மருத்துவமனைகளிலும் தனிவார்டு உள்ளது.

மேலும் தேனி, மதுரை உள்பட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் ஆய்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதோடு கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு விழிப்பாக இருக்கும்படி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தேவையில்லாமல் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

அதிகாரிகளுக்கு உத்தரவு

இதற்காக பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், மதுபார்களுக்கு வருகிற 31-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டது. அதை கண்காணிக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டது.

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், மதுபார்கள் நேற்று 2-வது நாளாக மூடப்பட்டன.

வீட்டில் முடங்கிய மக்கள்

இதனால் மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பினரின் நடமாட்டமும் வெகுவாக குறைந்து விட்டது. மேலும் கொரோனா வைரஸ் அச்சம் மட்டுமின்றி வெயிலும் கடுமையாக கொளுத்துகிறது. இதன் காரணமாக பொதுஇடங்களுக்கு செல்வதை தவிர்த்து விட்டு மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே சாலைகளில் ஓரளவு மக்கள் நடமாட்டம் உள்ளது.

இதனால் திண்டுக்கல் நகரின் முக்கிய சாலைகள் வாகன போக்குவரத்து குறைந்து வெறிச்சோடி காணப்படுகின்றன. இதற்கிடையே பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் ஒருசிலர் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.

ரெயில்களில் கூட்டம் குறைவு

இதற்காக மக்கள் பெரும்பாலும் பஸ்களிலேயே பயணம் செய்கின்றனர். ரெயில்களில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் பயணம் செய்யும் வாய்ப்பு உள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பரவி விடுமா? என்ற அச்சத்தில் ரெயில் பயணத்தை மக்கள் தவிர்த்து வருகின்றனர்.

இதனால் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் திண்டுக்கல் ரெயில் நிலையம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் திண்டுக்கல் வழியாக செல்லும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.

மேலும் செய்திகள்