குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தமபாளையத்தில் முஸ்லிம்கள் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தமபாளையத்தில் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-03-19 00:00 GMT
உத்தமபாளையம்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கூடாது என்பதை வலியுறுத்தியும் உத்தமபாளையத்தில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று உத்தமபாளையம் புறவழிச்சாலை பஸ் நிறுத்தம் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் சிராஜூதீன் தலைமையிலும், மாவட்ட செயலாளர் பசீர் அகமது முன்னிலையிலும் ஏராளமான முஸ்லிம்கள் கையில் தேசிய கொடியுடன் திரண்டனர்.

அப்போது அவர்கள் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் சிறை நிரப்பும் போரட்டம் நடத்துவதற்காக உத்தமபாளையம் போலீஸ் நிலையம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னக்கண்ணு மற்றும் போலீசார், போராட்டம் நடத்தியவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கூட்டம் அதிகமாக உள்ளதால் கைது செய்து ஒரே இடத்தில் அமர வைக்க முடியாது எனவும், இதுபோன்ற போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றனர். மேலும் தற்போது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகள் மக்கள் அதிகம் கூடும் தியேட்டர், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே போராட்டத்தை ஒத்திவைத்து ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்