பெராம்பட்டு- கீழகுண்டலபாடி இடையே பழைய கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டும்பணி அதிகாரி ஆய்வு

பெராம்பட்டு- கீழகுண்டலபாடி இடையே பழைய கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட பொதுப் பணித்துறை அதிகாரி ஆய்வு செய்தார்.

Update: 2020-03-19 23:00 GMT
அண்ணாமலைநகர்,

சிதம்பரம் அருகே பெராம்பட்டு, கீழகுண்டலபாடி பகுதியில் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் கடல் நீர் உட்புகுந்து வந்ததால் அப்பகுதியில் நிலத்தடி நீர் உப்பாக மாறியது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் விவசாய பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இது தவிர மழைக்காலங்களில் கிராமப் புறங்களுக்குள் வெள்ளநீர் புகுந்து வந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வந்தனர். இதை தவிர்க்க பெராம்பட்டு-கீழகுண்டலபாடி இடையே பழைய கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதனை ஏற்று தமிழக அரசு ரூ.42 கோடியே 79 லட்சம் மதிப்பில் கதவணை கட்ட நிதி ஒதுக்கியது. இதையடுத்து பெராம்பட்டு-கீழகுண்டலபாடி இடையே பழைய கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. தற்போது பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பாசன வசதி

இப்பணியை கடலூர் மாவட்ட பொதுப்பணித்துறை வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் ரவிமனோகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், பழைய கொள்ளிடம் ஆற்றில் கடல் நீர் உட்புகுவதை தடுக்கவும், கிராமங்களுக்குள் வெள்ள நீர் புகாமல் இருப்பதற்காகவும் கதவணை கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது. நவீன தொழில்நுட்பத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது இந்த கதவணை கட்டப்பட்டு பயன்பட்டுக்கு வரும் பட்சத்தில் அதில் மழைக்காலங்களில் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்கமுடியும். அதன் மூலம் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்றார். இந்த ஆய்வின்போது சிதம்பரம் செயற்பொறியாளர் சாம்ராஜ், உதவி செயற்பொறியாளர் அருணகிரி, உதவி பொறியாளர்கள் ரமே‌‌ஷ், முத்துகுமரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்