கடலூர் துறைமுகத்துக்கு 80 டன் சூரை மீன்கள் வந்தது வியாபாரிகள் ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்

கடலூர் துறைமுகத்துக்கு நேற்று ஒரே நாளில் 80 டன் சூரை மீன்கள் வந்தது. இதை வியாபாரிகள் ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்.

Update: 2020-03-19 23:00 GMT
கடலூர் முதுநகர்,

கடலூர் துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, அக்கரைக்கோரி, சோனாங்குப்பம், சொத்திக்குப்பம், ராசாபேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.

இதேபோல் நேற்றும் கடலூர் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்றனர். அவர்கள் வலைகளில் மற்ற மீன்களை விட அதிக அளவில் சூரை மீன்கள் சிக்கின. அவற்றை கடலூர் துறைமுகத்துக்கு மீனவர்கள் கொண்டு வந்தனர். வழக்கமாக இந்த வகை மீன்கள் சிக்குவது அரிதாக இருக்கும். ஆனால் தற்போது இந்த சூரை வகை மீன்கள் அதிக அளவில் சிக்கி வருவதாக மீனவர்கள் தெரிவித்தனர். இதன்படி நேற்று ஒரே நாளில் 80 டன் சூரை மீன்கள் சிக்கின. அவற்றை வியாபாரிகள் ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்.

கிலோ ரூ.100-க்கு விற்பனை

இது பற்றி மீனவர் ஒருவர் கூறுகையில், சூரை மீன்களை கேரளா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள பொதுமக்கள் அதிகம் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். மேலும் தற்போது கொரோனா வைரஸ் பீதியால் இறைச்சி சாப்பிடுவதை பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர். மாறாக மீன் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இது தவிர மற்ற மீன்பிடி தளங்களில் மீன்கள் வரத்து குறைவாக இருப்பதால் பெரும்பாலான வெளியூர் வியாபாரிகள் கடலூர் துறைமுகத்தில் முகாமிட்டு இருந்தனர்.

அவர்கள் போட்டி போட்டு மீன்களை வாங்கிச்சென்றனர். உள்ளூர் வியாபாரிகளும் மீன்களை ஆர்வமுடன் வாங்கிச்சென்று விற்பனை செய்தனர். 1 கிலோ சூரை மீன்கள் ரூ.100-க்கு விற்பனையானது. வழக்கமாக ஒரு கிலோ ரூ.50 முதல் 60 ரூபாய்க்கு தான் விற்பனையாகும். வரத்து அதிகம் இருந்தும் அதிக விலைக்கு மீன்கள் விற்பனையானது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

மீன்கள் வரத்து அதிகமாக இருந்ததால் கடலூர் துறைமுகம் பொதுமக்கள், வியாபாரிகள், மீனவர்கள் நடமாட்டத்துடன் களை கட்டியது. மீன்களை ஏற்றிச்செல்ல வாகனங்களும் அணிவகுத்து நின்றதை காணமுடிந்தது.

மேலும் செய்திகள்