விபத்தில் பலியான மாணவர் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்க கோரி கல்லூரியை மாணவர்கள் முற்றுகை

விபத்தில் பலியான மாணவர் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்கக்கோரி கல்லூரியை முற்றுகையிட்டு மாணவர்கள் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-03-19 23:44 GMT
பாகூர்,

வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கம் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் அருள் செல்வம். இவரது மகன் சுதர்சனம் (வயது 21). அபிஷேகப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். படித்துக் கொண்டே வில்லியனூரில் உள்ள காய்கறி கடையில் பகுதி நேர ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 17-ந்தேதி காலை காய்கறி கடையில் இருந்து கல்லூரிக்கு சுதர்சனம் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். வில்லியனூர் ஆச்சாரியாபுரம் தனியார் பெட்ரோல் பங்க் அருகில் வந்தபோது அவர் படித்து வந்த கல்லூரி பஸ்சே சுதர்சனம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

விடிய விடிய போராட்டம்

பலியான மாணவர் குடும்பத்துக்கு கல்லூரி நிர்வாகம் உரிய நஷ்டஈடு வழங்கக்கோரி உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து தவளக்குப்பம் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்று மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஆனால் பலியான மாணவருக்கு நஷ்டஈடு வழங்குவது குறித்து கல்லூரி நிர்வாகம் எந்த உறுதியும் அளிக்காததால் கடந்த 17-ந்தேதி முதல் கல்லூரியை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு முழுவதும் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

இவர்களது போராட்டம் நேற்று 3-வது நாளாக நடைபெற்றது. கல்லூரியை முற்றுகையிட்டு வாசலில் அமர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்