யெஸ் வங்கியிடம் ரூ.12,800 கோடி கடன் அனில் அம்பானி அமலாக்கத்துறை முன் ஆஜராகி வாக்குமூலம்

நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் யெஸ் வங்கியிடம் ரூ.12 ஆயிரத்து 800 கோடி கடன் பெற்ற விவகாரத்தில் அனில் அம்பானி அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

Update: 2020-03-20 00:46 GMT
மும்பை, 

முறைகேடுகளால் நிதி நெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கியின் செயல்பாடுகளை சமீபத்தில் ரிசர்வ் வங்கி முடக்கியது. மேலும் இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கவும் கட்டுப்பாடுகளை விதித்தது.

யெஸ் வங்கியில் நடந்த முறைகேடு குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து, அதன் நிறுவனர் ராணாகபூரை கைது செய்து விசாரணை நடத்தியது. யெஸ் வங்கியை தொடங்கிய குறுகிய காலத்தில் ஆலமரம் போல வளர்த்தெடுத்த அதே ராணாகபூரின் முறைகேடுகளால் வாராக்கடன் பிரச்சினை ஏற்பட்டு நிதி நெருக்கடியில் அந்த வங்கி சிக்கி தவிப்பது தெரியவந்தது.

பல்வேறு நிறுவனங்களுக்கு கடன் வழங்கியதற்காக ராணாகபூர் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.4 ஆயிரத்து 300 கோடி அளவுக்கு சட்டவிரோதமாக ஆதாயம் பெற்றது தெரியவந்தது.

பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு விதிகளை மீறி யெஸ் வங்கி பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கி உள்ளது.

இதைத்தொடர்ந்து யெஸ் வங்கியில் கடன் பெற்ற ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி மற்றும் பல்வேறு தொழில் நிறுவன அதிபர்களும் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

இதன்படி மும்பையில் பல்லார்ட் தோட்டம் அருகே உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி நேற்று காலை 9.30 மணியளவில் நேரில் ஆஜராகி வாக்குமூலத்தை பதிவு செய்தார். நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தகவல்கள் வெளியாகின.

அனில் அம்பானியின் 9 நிறுவனங்கள் பண நெருக்கடிக்கு ஆளான யெஸ் வங்கியில் இருந்து சுமார் ரூ. 12 ஆயிரத்து 800 கோடி கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

இதேபோல் எசெல் குழும அதிபர் சுபாஷ் சந்திரா, ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் ஆகியோருக்கும் நேற்றைய தேதியிட்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை.

இதில் சுபாஷ் சந்திரா நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “ராணாகபூர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் எசெல் நிறுவனம் எந்த பண பரிவர்த்தனையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் அமலாக்கத்துறையின் சம்மனை ஏற்று ஒத்துழைப்பை அளிப்பேன்” என்றார்.

எசெல் குழுமம் யெஸ் வங்கியிடம் கடன் பெற்ற ரூ.8 ஆயிரத்து 400 கோடியை திரும்ப செலுத்தவில்லை என தெரிகிறது.

இதேபோல் இந்தியாபுல்ஸ் நிறுவனர் சமீர் கெலாட் அமலாக்கத்துறைக்கு அனுப்பிய தகவலில், தான் வெளிநாட்டில் இருப்பதால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தன்னால் இந்தியா வர இயலவில்லை. எனவே 20-ந் தேதி (இன்று) நேரில் ஆஜராக அனுமதி அளிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டு உள்ளார்.

யெஸ் வங்கி பிரச்சினையில் பிரபல தொழில் அதிபர்கள் அமலாக்கத்துறை முன் ஆஜராகுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்