கொரோனா தடுப்பு நடவடிக்கை : நகர பகுதியில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புதுவை நகர பகுதியில் கவர்னர் கிரண்பெடி நேற்று இரவு ஆய்வு செய்தார்.

Update: 2020-03-20 22:45 GMT
புதுச்சேரி, 

புதுவை நகர பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கவர்னர் கிரண்பெடி நேற்று இரவு ஆய்வு செய்தார். இதற்காக கவர்னர் மாளிகையில் இருந்து காரில் புறப்பட்ட அவர் செஞ்சி சாலை, புஸ்சி வீதி வழியாக அண்ணா சாலைக்கு சென்றார்.

அங்குள்ள ஒரு தனியார் துணிக்கடையில் மக்கள் கூட்டமாக இருப்பதை பார்த்த உடன் கவர்னர் கிரண்பெடி தனது காரில் இருந்து கீழே இறங்கினார். அங்கு இருந்த பொதுமக்களிடம் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். கொரோனா குறித்து விழிப்புணர்வு உள்ளதா? என்று கேட்டறிந்தார்.

பொதுமக்களுக்கு வேண்டுகோள்

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர் நேரு வீதிக்கு சென்றார். அங்கு அண்ணா சாலை சந்திப்பில் இருந்து ஆம்பூர் சாலை சந்திப்பு வரை நடந்தே சென்றார். அப்போது ஒரு சில கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனை பார்த்த கவர்னர் கிரண்பெடி, தேவையில்லாமல் மக்கள் பொது இடங்களில் ஒன்று கூட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் பொதுமக்களுக்கு கொரோனா தொடர்பாக ேபாதுமான விழிப்புணர்வு இருப்பதாக தெரியவில்லை. எனவே பொதுமக்களிடம் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு கவர்னர் மாளிகைக்கு சென்றார். இந்த ஆய்வின் கவர்னர் கிரண்பெடி முககவசம் அணிந்திருந்தார்.

இந்த ஆய்வில்டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீ வஸ்தவா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால்மற்றும் கவர்னர் மாளிகை அதிகாரிகள் உடனிருந்தனர்.

முள்ளோடை நுழைவுவாயில்

புதுச்சேரி - கடலூர் சாலையில் முள்ளோடை நுழைவு வாயில் சோதனை சாவடியில் போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு நேற்று இரவு 9.30 மணியளவில் போலீஸ் ஐ.ஜி. சுரேந்தர் சிங் யாதவ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தேர்தல் நேர சோதனையை விட தீவிர சோதனை செய்ய மருத்துவக்குழு வினரை கேட்டுக்கொண்டார்.இந்த ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன், பாகூர் சப்-இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்