உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்க குவிந்த பொதுமக்கள்

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிக அளவு கூடும் பல்வேறு இடங்களை மூட உத்தரவிட்டு உள்ளது.

Update: 2020-03-21 22:15 GMT
புதுக்கோட்டை, 

 புதுக்கோட்டை நகரில் பல இடங்களில் மாவட்ட நிர்வாகம் மற்றும் புதுக்கோட்டை நகராட்சியின் சார்பில் கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், உணவு, பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் வழக்கம் போல் திறந்திருக்கும். எனவே பொது மக்கள் ஒரே நேரத்தில் காய்கறிகள், மளிகை பொருட்கள் போன்றவற்றை பெருமளவில் வாங்கி சேமித்து வைத்து கொள்ள வேண்டும் என்ற தவறான வதந்திகளை நம்பி யாரும் அச்சமடைய தேவையில்லை என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை நகரில் வாரச்சந்தை நடைபெறாததாலும், நகரில் உள்ள பெரிய கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதால், புதுக்கோட்டையில் உள்ள உழவர் சந்தையில் நேற்று காலையில் வழக்கத்தைவிட அதிக அளவில் பொதுமக்கள் வந்து, தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர். இதனால் நேற்று உழவர் சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சிலர் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை மொத்தமாக வாங்கி சென்றனர். சிலர் ஒரு நாளைக்கு மட்டும் தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர்.

மேலும் செய்திகள்