கொரோனா வைரஸ் எதிரொலி: சிவன் கோவில்களில் பக்தர்கள் இன்றி நடந்த பிரதோஷ பூஜை

கொரோனா வைரஸ் எதிரொலியால் கோவில்களுக்குள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிவன் கோவில்களில் பக்தர்கள் இன்றி நேற்று பிரதோஷ பூஜை நடந்தது.

Update: 2020-03-22 00:00 GMT
விருத்தாசலம்,

கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க கடலூர் மாவட்டத்தில் உள்ள 300 கோவில்களுக்குள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோவில்களில் ஆகம விதிப்படி பூஜைகள் மட்டும் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி மூலவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள நந்தீஸ்வரருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. வழக்கமாக பிரதோஷ பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் கொரோனா வைரஸ் எதிரொலியால் நேற்று பக்தர்கள், கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கோவில் கதவும் சாத்தப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் கோவில் கோபுரம் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

பாடலீஸ்வரர் கோவில்

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று மாலை பிரதோஷ பூஜை நடந்தது. இதையொட்டி நந்தீஸ்வரருக்கு பால், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் கோவில் முன்பு நின்று தரிசனம் செய்தனர். இதேபோல் பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில், காட்டுமன்னார்கோவில் உடையார்குடி அனந்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில் பக்தர்களின்றி பிரதோஷ பூஜை நடந்தது. 

மேலும் செய்திகள்