தென்பெண்ணையாற்றில் மணல் கடத்தலைத் தடுக்க பள்ளம் தோண்டி தடுப்புகள்

பாகூர் அருகே தென்பெண்ணையாற்றில் மணல் கடத்தலைத் தடுக்க மாட்டு வண்டிகள் செல்லும் பாதையில் பள்ளம் தோண்டி தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Update: 2020-03-21 23:49 GMT
பாகூர்,

புதுவையில் ஆறுகளில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதால் கட்டுமானப் பணிக்கு மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி லாரிகள் உள்ளிட்ட வாகனங்களிலும் மாட்டு வண்டிகளிலும் மணல் திருடப்பட்டு வந்தது. இதுகுறித்து புகார்கள் வந்ததையடுத்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து மணல் கடத்தலை தடுத்து வருகிறார்கள். ஆனாலும் திருட்டுத்தனமாக மணல் கடத்தல் நடந்து வருகிறது. இந்த கும்பலை பிடித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள்.

பாகூர், சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க பாகூர் போலீசார் பல்வேறு வழிகளில் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனால் மாட்டுவண்டி மற்றும் டிராக்டர் போன்றவற்றில் மணல் கொள்ளை அடிப்பதை கைவிட்டு நூதன முறையில் மணல் கொள்ளை நடந்து வருகிறது.

தடுப்பு நடவடிக்கை

ஆற்றிலிருந்து சாக்குப் பைகளில் மணலை நிரப்பி அதனை மோட்டார் சைக்கிள் மூலம் கொண்டு சென்று மறைவிடத்தில் குவித்து வைத்து பின்னர் போலீசார் கண்டுபிடிக்காத வகையில் கூண்டு வண்டிகளில் நூதன முறையில் மணலை கடத்தி செல்கின்றனர். போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு இந்த வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மணல் கொள்ளையை முற்றிலும் தடுக்க பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார் மற்றும் பாகூர் தாசில்தார் குமரன், வருவாய் ஆய்வாளர் திருவேங்கடம் மற்றும் வருவாய் துறை ஊழியர்களும் இணைந்து சோரியாங்குப்பம் தென்பெண்ணையாறு காட்டுப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் பொக்லைன் இயந்திரம் மூலம் 5 இடங்களில் பெரிய அளவில் பள்ளம் தோண்டி பாதைகளை துண்டித்தனர்.

மேலும் தென்பெண்ணையாற்றில் தடையை மீறி மணல் திருட்டில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

மேலும் செய்திகள்