ஊரடங்கையொட்டி கடைகள் அடைப்பு; பஸ்கள் ஓடவில்லை - மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடியது

ஊரடங்கையொட்டி நெல்லை மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் ஓடவில்லை. இதனால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடியது.

Update: 2020-03-22 22:15 GMT
நெல்லை, 

கொரோனோ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிரதமர் மோடி வேண்டுகோளின்படி தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டது. பஸ், ரெயில்கள் ஓடவில்லை.

முக்கூடல் பகுதியில் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. ஒரு சில கடைகள் மட்டும் வழக்கம்போல் திறந்து இருந்தன. அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் திறந்து இருந்த கடைகளின் உரிமையாளர்களிடம் மக்கள் ஊரடங்கு உத்தரவை மதிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினர். தொடர்ந்து அந்த கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் முக்கூடல் பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் நடமாட்டமும் அதிகளவில் இல்லை.

அம்பையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடியது. முகூர்த்த நாளான நேற்று பெரும்பாலான திருமண மண்டபங்கள் மூடியே இருந்தது. புதுக்கிராமம் தெருவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமண விழா நடைபெற்றது. குறைந்தளவு மக்கள் கலந்து கொண்டனர். மேலும் மண்டபத்தின் வாயில் நகராட்சி ஆணைப்படி, கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு கை கழுவிய பின்னரே மண்டபத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

பொது விடுமுறையாக இருந்ததால் முழு அளவில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அசைவ பிரியர்கள் அதிகாலையிலே மட்டன், சிக்கன், மீன் வாங்கி சென்றனர். காலை 9 மணிக்கு மேல் சில இடங்களில் வீடுகளில் வைத்தே மட்டன், சிக்கன் விற்பனை செய்யப்பட்டது.

பேட்டையில் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இறைச்சி, மீன் கடைகள் மட்டும் வழக்கம்போல் திறந்து இருந்தன. பொதுமக்கள் யாரும் வெளியே வரவில்லை. பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் சேரன்மாதேவி மெயின் ரோடு வேறிச்சோடி காணப்பட்டது.

களக்காடு பகுதியில் 700-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. களக்காடு வரதராஜ பெருமாள் கோவில், சத்தியவாகீஸ்வரர் கோமதி அம்பாள் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் மூடப்பட்டன. உவரி கடற்கரையில் தினமும் ஏராளமான பொதுமக்கள் கூடி தங்கள் பொழுதை கழிப்பர். நேற்று மக்கள் ஊரடங்கை முன்னிட்டு பொதுமக்கள் யாரும் கடற்கரைக்கு வரவில்லை. இதனால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.

வள்ளியூரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை. பணகுடி காவல்கிணறு காய்கனி மார்க்கெட் அடைக்கப்பட்டிருந்தது. இதனால் அது வெறிச்சோடி காணப்பட்டது.

இட்டமொழி, பரப்பாடி, வடக்கு விஜயநாராயணம் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. கிறிஸ்தவ ஆலயங்களில் அதிகாலை 6.30 மணிக்குள் பிரார்த்தனைகள் முடிவடைந்தன. அதன்பின்னர் எந்த பிரார்த்தனைகளும் நடைபெறவில்லை. ராதாபுரம், காவல்கிணறு விலக்கு, சேரன்மாதேவி, வடக்கன்குளத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் செய்திகள்