வீட்டு வாசலில் பாத்திரத்தில் மஞ்சள், சாணம், வேப்பிலை வைத்து வினோத வழிபாடு - பாகூரில் பரபரப்பு

பாகூரில் வீட்டு வாசலில் பாத்திரத்தில் மஞ்சள், சாணம், வேப்பிலை வைத்து வினோத வழிபாடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-03-22 22:59 GMT
பாகூர்,

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க மத்திய அரசு வழிகாட்டுதலின்படி புதுச்சேரி அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநில எல்லைப் பகுதியில் போலீசார் உதவியுடன் வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அதில் பயணம் செய்வோருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருக்கிறதா என மருத்துவ குழுவினர் சோதனை செய்கிறார்கள். அதன்பிறகே அனுமதித்து வருகின்றனர்.

தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், பாகூர், கரையாம்புத்தூரில் உள்ள கடைகளை அதன் உரிமையாளர்கள் தாங்களாக முன்வந்து மூடிஇருந்தனர்.

பஸ், கார், மோட்டார் சைக்கிள்கள் எதுவும் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி இருந்தன. ஒரு சிலர் மட்டுமே வந்தனர். அவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். விவசாய பணிகள், கட்டுமான பணிகள், கூலி வேலை எதுவும் நடக்கவில்லை. முள்ளோடை நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மருத்துவ குழுவினருக்கு இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஜூஸ், பழங்கள் வழங்கி அவர்களை ஊக்குவித்தனர்.

கொரானா வைரஸ் வீட்டுக்குள் வராமல் இருக்கவும், தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும் வேண்டுமானால் வீட்டு வாசலில் ஒரு பாத்திரத்தில் மஞ்சள், சாணம் கரைசல், அதன் மீது வேப்பிலையை வாசலில் வைத்து வழிபட வேண்டும் என்று பாகூர் பகுதியில் நேற்று காலை நூதனமாக வதந்தி பரவியது. உடனே பாகூரில் அனைத்து தெருக்களிலும் பெண்கள் தங்களது வீட்டு வாசலில் பாத்திரம், சாணம், மஞ்சள் கரைசலுடன் வேப்பிலையை வைத்து வழிபட்டனர்.

இந்த தகவல் பாகூரையொட்டி உள்ள மற்ற பகுதிகளுக்கும் பரவியது. அங்குள்ள பெண்களும் வீட்டு வாசலில் இதேபோல் மஞ்சள், சாணம் கரைசல், வேப்பிலையை வைத்து வழிபட்டனர். இதுபற்றி ஊர்களிலுள்ள உறவினர்களுக்கும் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இந்த வினோத வழிபாடு பாகூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்