ஊரடங்கையொட்டி வீட்டுக்குள் முடங்கிய மக்கள்; கடைகள் அடைப்பு- சாலைகள் வெறிச்சோடின

ஊரடங்கையொட்டி பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கினர். மேலும் கடைகள் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Update: 2020-03-23 05:19 GMT
பெரம்பலூர், 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவி உலகேயே அச்சுறுத்தி கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனா, இத்தாலி, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இந்தியாவில் தொடக்கத்தில் இருந்தே கொரோனா வைரஸ் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பெரிய அளவில் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்டவர்களில் சிலர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திலும் கொரோனா வைரசால் 7 பேர் பாதிப்படைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பை தமிழகத்தில் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கலெக்டர் சாந்தா தலைமையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்திற்கு வெளிநாடு- வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ள 148 பேர் சுகாதார பணியாளர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் நேற்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்குமாறு பிரதமர் மோடி ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி நேற்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது. தமிழகத்தில் நேற்று காலை 7 மணி முதல் 9 மணி வரை மக்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

பின்னர் நேற்று திடீரென்று மக்கள் ஊரடங்கு உத்தரவு இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், குன்னம், ஆலத்தூர், வேப்பந்தட்டை ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நேற்று காலை 7 மணி முதல் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணி வரை மக்கள் ஊரடங்கு உத்தரவு முழுமையாக கடைபிடிக்கப்பட்டது.

இந்த ஊரடங்கு உத்தரவினால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள், ஷேர் ஆட்டோக்கள், கனரக வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் ஓடவில்லை. ஊரடங்கு உத்தரவு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்ததால் வெளியூர்களில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்தில் தங்கியிருந்து பணிபுரிந்த ஊழியர்கள் ஏற்கனவே முன்னதாகவே தங்களது சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.

 இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் இடங்களான பெரம்பலூர் புதிய, பழைய பஸ் நிலையங்கள், நான்கு ரோடு, மூன்று ரோடு, திருமாந்துறை சுங்கச் சாவடி உள்ளிட்ட பல்வேறு இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அரசு பஸ்கள் பெரம்பலூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

மேலும் மக்கள் ஊரடங்கிற்கு ஆதரவு தெரிவித்து மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், சிறிய, பெரிய மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், ஓட்டல்கள், வாரச்சந்தைகள், ஜவுளி கடைகள் மூடப்பட்டிருந்தன. பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டிருந்தன. 

இதனால் பெரம்பலூரில் கடைவீதி, போஸ்ட் ஆபீஸ் தெரு, பள்ளி வாசல் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய பகுதிகளில் ஆட்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது. மக்கள் ஊரடங்கு உத்தரவினால் மாவட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளிவரவில்லை. அவர்களில் பலர் தங்களது வீடுகளில் குடும்பத்தினருடன் டி.வி.யில் செய்தி மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர். பலர் முககவசங்களை அணிந்திருந்ததை காணமுடிந்தது. 

மேலும் சிலர் தங்களது குடும்பத்தினருடன் பொழுதை போக்கினர். ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்திருந்ததால் பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. கொரோனா வைரஸ் பரவவுதை தடுக்க பிரதமர் மோடியின் அறிவித்த மக்கள் ஊரடங்கு உத்தரவு பெரம்பலூர் மாவட்டத்தில் நூறு சதவீதம் முழுமையாக கடைபிடிக்கப்பட்டது என்றே கூறலாம்.

மேலும் செய்திகள்