திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 500 படுக்கைகளுடன் கொரோனா தனிவார்டு - கலெக்டர் சிவன்அருள் ஆய்வு

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 500 படுக்கைகள் கொண்ட கொரோனா வைரசுக்கான வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்டை கலெக்டர் சிவன்அருள் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

Update: 2020-03-23 22:30 GMT
திருப்பத்தூர், 

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக ரூ.5 கோடியில் 2 மாடி கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் இருந்தது. இந்த புதிய கட்டிடத்தை கொரோனா தடுப்பு சிறப்பு வார்டாக மாற்ற கலெக்டர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அங்கு கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க 500 படுக்கை வசதிகள் கொண்ட வார்டாக மாற்றப்பட்டது.

இதனை கலெக்டர் சிவன்அருள் ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த சிறப்பு கவுண்ட்டர்கள், ஸ்கேன், எக்ஸ்ரே மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு, முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள படுக்கை வசதிகள், கையிருப்பு வைக்கப்பட்டுள்ள ஊசிகள், மாத்திரைகள், மருந்துகள் ஆகியவற்றை பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பத்தூர் அரசு மருத்துமனையில் 500 படுக்கை கொண்ட கொரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது. புதிய மருத்துவமனை கட்டிடம் முழுவதும் ஆக்சிஜன் குழாய்கள், அவசர சிகிச்சை கருவிகள், ஆம்புலன்ஸ், மருத்துவர்கள், நர்சுகள் பிரத்யேகமாக உபயோகப்படுத்தப்படும் உடைகள், முகக் கவசங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.

இது மட்டுமன்றி மாவட்டத்தில் உள்ள பெரிய தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை அறைகளில் 25 சதவீதம் கொரோனா வார்டுகளாக உபயோகப்படுத்திக் கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை வார்டுகள் ஏற்படுத்தப்பட உள்ளது. கொரோனா சிறப்பு வார்டுக்கு செல்லும் முன்பு கைகழுவ தனியாக தண்ணீர் தொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் திலீபன் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்