அரசு உத்தரவை மீறி திறந்து இருந்த வணிக நிறுவனங்கள் மூடல் அதிகாரிகள் நடவடிக்கை

மயிலாடுதுறையில் அரசு உத்தரவை மீறி திறந்து இருந்த வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன.

Update: 2020-03-24 00:00 GMT
குத்தாலம்,

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் மக்கள் அதிகளவில் கூடும் வணிக வளாகங்கள், கடைகள், திரையரங்குகளை வருகிற 31-ந் தேதி வரை மூட மத்திய, மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்துள்ளன. அதன்படி நாடு முழுவதும் வணிக வளாகங்கள், மக்கள் கூடும் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.

மயிலாடுதுறையில் பெரும்பாலான பெரிய வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஆனால் ஒரு சில நிறுவனங்கள் மட்டும் திறந்திருப்பதாக மயிலாடுதுறை நகராட்சியின் சுகாதாரத்துறைக்கு தகவல் வந்தது.

சூப்பர் மார்க்கெட்

அதன்பேரில் நேற்று நகர்நல அலுவலர் கிரு‌‌ஷ்ணகுமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் பிச்சைமுத்து, ராமையன் மற்றும் சுகாதார அலுவலர்கள், பட்டமங்கலத்தெருவில் திறந்திருந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றனர். அப்போது அங்கு 100-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், பொருட்கள் வாங்கி கொண்டிருந்தனர். 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் அந்த நிறுவனத்தில், கொரோனா வைரஸ் தடுக்க அரசு ஏற்கனவே தடை செய்த பயோமெட்ரிக் முறையை கூட கைவிடாமல் அந்த எந்திரத்தை பயன்படுத்தி வந்தனர்.

இதனை கண்ட சுகாதாரத்துறையினர், உடனடியாக அந்த சூப்பர் மார்க்கெட்டை மூடும்படி உத்தரவிட்டனர். ஆனால் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர், சூப்பர் மார்க்கெட்டை மூட முடியாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் சிறிதுநேர விவாதத்திற்கு பின்பு சூப்பர் மார்க்கெட்டை மூடுவதாக ஒப்பு கொண்டு, வாடிக்கையாளர்களை வெளியேற்றிவிட்டு பணியாளர்களையும் வீடுகளுக்கு செல்லும்படி அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கேட்டு கொண்டார். தொடர்ந்து அந்த சூப்பர்மார்க்கெட் மூடப்பட்டது.

திறக்க கூடாது

மறு உத்தரவு வரும்வரை சூப்பர் மார்க்கெட்டை திறக்க கூடாது என்றும், அதனை மீறி திறந்தால் கடைக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று நகர்நல அலுவலர் எச்சரிக்கை விடுத்தார். இதேபோல் மயிலாடுதுறை காந்திஜிரோட்டில் திறந்திருந்த ஒரு ஜவுளிக்கடையையும் அதிகாரிகள் மூடினர்.

அடுத்தடுத்து வணிக நிறுவனங்கள் மூடப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து நகர்நல அலுவலர் கூறியதாவது:-

எச்சரிக்கை

30 ஊழியர்களுக்கு மேல் பணியாற்றும் வணிக நிறுவனங்கள், பரவலாக்கப்பட்ட குளிர்சாதனம் அமைந்துள்ள நிறுவனங்கள், கொரோனா வைரஸ் தொற்று பரவும் வாய்ப்புள்ள மக்கள் அதிக அளிவல் கூடும் நிறுவனங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்தரவை மீறும் நிறுவனங்களுக்கு தற்போது எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி வருகிறோம். தொடர்ந்து அந்த நிறுவனங்கள் செயல்படும் பட்சத்தில் பூட்டில் ‘சீல்’ வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்