தஞ்சையில் கடைகள் திறப்பு; குறைவான பயணிகளுடன் பஸ்கள் இயங்கின

தஞ்சையில் கடைகள் திறக்கப்பட்டன. குறைவான பயணிகளுடன் பஸ்கள் இயங்கின.

Update: 2020-03-24 00:00 GMT
தஞ்சாவூர்,

சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு மாநிலங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக தமிழக அரசு அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் வருகிற 31-ந்தேதி வரை விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள், தனியார், அரசு கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் உள்ள தியேட்டர்கள், அன்னை சத்யா விளையாட்டு அரங்கம், சுற்றுலா தலங்களான அரண்மனை, கலைக்கூடம், கல்லணை, மனோரா உள்ளிட்ட இடங்களும் வருகிற 31-ந்தேதி வரை மூடப்பட்டுள்ளது.

மக்கள் ஊரடங்கு

மக்கள் ஊரடங்கு காரணமாக நேற்று முன்தினம் தஞ்சை மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. பஸ், ரெயில்கள், ஆட்டோக்கள், சுற்றுலா கார், வாகனங்கள் அனைத்தும் இயங்கவில்லை. இந்த நிலையில் ஊரடங்கு நேற்று காலை 5 மணியுடன் முடிவடைந் ததையடுத்து தஞ்சையில் கடைகள் திறக்கப்பட்டன.

பெரிய நகைக்கடைகள், துணிக்கடைகள், வர்த்தக நிறுவனங்கள் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன. மற்றபடி பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. சாலைகளிலும் மக்கள் நடமாட்டம் வழக்கம் போல காணப்பட்டது. ரெயில் சேவைகள் வருகிற 31-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதால் ரெயில் நிலையம் மூடப்பட்டு போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

பஸ்கள் ஓடின

பஸ்கள் வழக்கம் போல ஓடின. ஆனால் குறைந்த அளவே பயணிகள் பயணம் செய்தனர். தஞ்சை பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டன. பஸ் நிலையங்களில் பஸ்களுக்கு கிருமி நாசினி தொடர்ந்து தெளிக்கப்பட்ட வண்ணம் இருந்தது.

ஆட்டோக்கள் இயங்கின. ஆனால் பயணிகள் வராததால் ஆட்டோ டிரைவர்கள் காத்துக்கிடந்தனர். இதனால் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

அரசு அலுவலகங்களில் வேலைபார்க்கும் அனைவரும் முககவசம் அணிந்தபடி பணியாற்றினர். தஞ்சை மாவட்டத்தின் எல்லையில் உள்ள 8 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் செய்திகள்