தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் வழக்கம் போல் இயங்கியது - குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டன

தூத்துக்குடியில் மக்கள் ஊரடங்குக்கு பிறகு நேற்று காய்கறி மார்க்கெட். வழக்கம் போல் இயங்கியது. குறைந்த எண்ணிக்கையிலான பஸ்கள் இயக்கப்பட்டன.

Update: 2020-03-23 22:15 GMT
தூத்துக்குடி, 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் அனைத்து நாடுகளும் கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வருகின்றன. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகத்தில் நேற்று காலை 5 மணி வரை நீடித்த இந்த ஊரடங்கு உத்தரவு காலையில் சகஜ நிலைக்கு திரும்பியது.

பஸ்கள் காலை முதல் வழக்கம் போல் இயங்க தொடங்கின. வெளிமாவட்டங்கள் மற்றும் நீண்ட தூரம் செல்லும் பஸ்கள் குறைந்த அளவில் இயக்கப்பட்டன. குறைந்த தூரம் இயங்கும் பஸ்கள் மற்றும் டவுன் பஸ்களும் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் சென்றனர்.

பெரிய வணிக வளாகங்கள் தவிர சிறிய கடைகள் அனைத்தும் வழக்கம் போல் திறந்து இருந்தன. காய்கறி மார்க்கெட்டும் திறந்து இருந்தது. வெளிமாவட்டங்களில் இருந்து வழக்கம் போல் லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் காய்கறிகள் கொண்டு வரப்பட்டது. அனைத்து கடைகளிலும் ஏராளமான காய்கறிகள் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. ஆனால் வழக்கத்தை விட மக்கள் குறைவான அளவே மார்க்கெட்டுக்கு வந்து காய்கறிகளை வாங்கி சென்றனர். ஓட்டல்கள், டீக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தூத்துக்குடியில் லாரிகள், ஆட்டோக்கள் குறைந்த அளவில் இயங்கின. வெளி மாவட்டங்களுக்கு செல்லும் லாரிகள் குறைந்த அளவில் இயங்கின. அதே நேரத்தில் துறைமுகத்தில் இருந்து சரக்கு லாரிகள் வழக்கம் போல் இயங்கின. மக்கள் நடமாட்டமும் குறைந்து காணப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு இருந்தது. இதனால் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதே நேரத்தில் மக்கள் சிலர் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் நேற்று வழக்கமான பணிகள் நடந்தன. கப்பல்களில் இருந்து சரக்குகள் கையாளப்பட்டு லாரிகள் மூலம் ஏற்றி வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

தூத்துக்குடியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மாநகராட்சி மூலம் கொரோனா வைரஸ் குறித்து ஒலிபெருக்கி மூலம் தெருத் தெருவாக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் செய்திகள்