தேனி பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தில் 120 படுக்கை வசதியுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு கலெக்டர் ஆய்வு

தேனி பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தில் 120 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை பிரிவை கலெக்டர் பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2020-03-23 23:30 GMT
தேனி,

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு 100 முதல் 150 படுக்கை வசதிகளை கொண்ட சிறப்பு சிகிச்சை பிரிவை ஏற்பாடு செய்து தயார் நிலையில் வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தேனி மாவட்டத்தில் இத்தகைய சிறப்பு சிகிச்சை பிரிவு அமைக்க இடம் தேர்வு செய்யும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தியது. அதன்படி தேனி சமதர்மபுரத்தில் உள்ள பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தில் இந்த சிகிச்சை பிரிவு அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த மருத்துவமனை, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தொடங்குவதற்கு முன்பு வரை செயல்பட்டது. அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்ட பின்பு இந்த கட்டிடம் பயன்பாடு இன்றி இருந்தது. பின்னர் இந்த கட்டிடம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த ஒரு ஆண்டு காலமாக காய்ச்சல், இருமல் போன்ற பாதிப்புகளுக்கான வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவாக காலை நேரத்தில் மட்டும் செயல்பட்டு வருகிறது. அத்துடன் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையமாகவும் இந்த கட்டிடம் பயன்படுத்தப்பட்டு வந்தது.

கலெக்டர் ஆய்வு

படுக்கை வசதிகளுடன் இடவசதி தாராளமாக இருந்ததால் இந்த கட்டிடத்திலேயே கொரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை பிரிவு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு சிறப்பு வார்டுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை துரிதமாக மேற்கொண்டு ஓரிரு நாட்களில் முடித்து தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்த கட்டிடத்தில் ஐ.சி.யு. அறை, சாதாரண அறை, வெண்டிலேட்டர் கருவிகள், குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க கலெக்டர் உத்தரவிட்டார். அத்துடன், இங்கு பணியாற்றுவதற்கு சிறப்பு மருத்துவ குழுவினர் நியமிக்கப்பட உள்ளனர்.

120 படுக்கை வசதிகள்

முதற்கட்டமாக இங்கு 120 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. ஒவ்வொரு படுக்கைக்கும் 3 அடி இடைவெளி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில், ஐ.சி.யு. அறையில் மொத்தம் 14 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த கட்டிடத்துக்கு தேவையான தண்ணீரை வினியோகம் செய்வதற்கு தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளருக்கு, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தினமும் சுமார் 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீதம் வினியோகம் செய்யப்பட உள்ளது. இதற்காக பழனிசெட்டிபட்டி முல்லைப்பெரியாற்றில் தேனி அல்லிநகரம் நகராட்சிக்காக அமைக்கப்பட்டுள்ள உறைகிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்