யாதகிரி அருகே, தேர்வு எழுதிவிட்டு திரும்பியபோது கடத்தி கற்பழிப்பு; கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

யாதகிரி அருகே தேர்வு எழுதிவிட்டு திரும்பிய போது 4 நபர்களால் கற்பழிக்கப்பட்ட கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2020-03-23 23:31 GMT
பெங்களூரு, 

யாதகிரி மாவட்டம் சுரபுரா தாலுகா கெம்பாவி அருகே அமலகாலா கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளிக்கு 20 வயதில் ஒரு மகள் இருந்தார். அவர், யாதகிரியில் உள்ள ஒரு பி.யூ. கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். 

கடந்த 21-ந் தேதி அவர் கல்லூரியில் நடந்த தேர்வை எழுத சென்றிருந்தார். தேர்வு எழுதிவிட்டு அந்த மாணவி வீட்டுக்கு திரும்பிய போது 4 மர்மநபர்கள், அவரை கடத்தி சென்றிருந்தனர். பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து அந்த மாணவியை மர்மநபர்கள் கற்பழித்ததாக கூறப்படுகிறது.

மேலும் நடந்த சம்பவங்கள் பற்றி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்றும் அந்த மர்மநபர்கள், அம்மாணவிக்கு மிரட்டல் விடுத்திருந்தனர். இதனால் மனம் உடைந்த அந்த மாணவி வீட்டில் அழுதபடியே இருந்தார். பின்னர் பெற்றோர் விசாரித்த போது, அவரை 4 பேர் கற்பழித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சுரபுரா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 மர்மநபர்களையும் கைது செய்ய தீவிரம் காட்டினார்கள்.

இந்த நிலையில், மர்மநபர்கள் தன்னை கற்பழித்ததால் மனம் உடைந்த மாணவி தனது வீட்டில் விஷத்தை குடித்துவிட்டு உயிருக்கு போராடினார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக கலபுரகி மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு மாணவிக்கு டாக்டா்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக இறந்துவிட்டார். 

தகவல் அறிந்ததும் சுரபுரா போலீசார், அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றினர். பின்னர் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

போலீஸ் விசாரணையில், கெம்பாவி கிராமத்தை சேர்ந்த ராஜண்ணா சாவண்ணா, தேவேந்திரப்பா, மகேஷ், அனில்குமார் ஆகிய 4 பேர் தான் மாணவியை கடத்திச் சென்று கற்பழித்தது தெரியவந்தது. அவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், தலைமறைவான 4 பேரில் ராஜண்ணா, தேவேந்திரப்பா ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறைவாக உள்ள மகேஷ், அனில்குமாரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் யாதகிரியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்