கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: அரசு உத்தரவுகளை பின்பற்றாத 2 மதுக்கடைகள் மூடல்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அரசின் உத்தரவுகளை பின்பற்றாத 2 மதுக்கடைகள் மூடப்பட்டன.

Update: 2020-03-23 23:54 GMT
பாகூர்,

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதுவையில் உள்ள மதுபார்கள் அனைத்தும் வருகிற 31-ந் தேதி வரை மூடப்பட்டுள்ளன. அதே நேரத்தில் மதுக்கடைகளை திறந்து வைக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

அதாவது மதுவாங்க வருபவர்கள் ஒருவருக்கு, ஒருவர் 1 மீட்டர் இடைவெளியில் வர வேண்டும். கடையில் பணி செய்யும் ஊழியர்கள் முக கவசம் அணிய வேண்டும். மதுக் கடையில் கைகளை கழுவ சோப்பு மற்றும் தண்ணீர் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

2 மதுக்கடைகள் மூடல்

இந்த நிலையில் முள்ளோடை பகுதியில் உள்ள மதுக்கடைகளில் அரசின் அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படுகின்றனவா? என்று கலால்துறை துணை ஆணையர் தயாளன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று காலை அங்கு சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள 2 மதுபான கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படாமல் இருப்பது தெரியவந்தது. உடனே அந்த 2 கடைகளையும் மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

எச்சரிக்கை

பின்னர் அந்த கடையின் உரிமையாளர்களை அழைத்து அரசு தெரிவித்துள்ள ஏற்பாடுகளை செய்த பிறகே கடைகளை திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இனிமேல் ஆய்வுக்கு வரும் போது அரசின் உத்தரவுகளை பின்பற்றவில்லை என்றால் கடை உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

பின்னர் அந்த 2 மதுக்கடை உரிமையாளர்களும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட பின்னர் நேற்று மதியத்திற்கு மேல் மதுக்கடைகளை திறந்தனர்.

மேலும் செய்திகள்